தென்னாப்பிரிக்க அணி புதிய கேப்டன் குயிண்டன் டி காக்கின் தலைமையில் எழுச்சி கண்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க அணி சரியாக ஆடாமல் சொதப்பிவந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணி எழுச்சி காண வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், டுப்ளெசிஸை கேப்டன்சியில் இருந்து நீக்கி, டி காக்கை கேப்டனாக்கியது. டி காக்கின் தலைமையில் தென்னாப்பிரிக்க அணி, இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நன்றாக ஆடியது. 

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அடுத்தகட்டத்திற்கு நகர வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து டுப்ளெசிஸ் அவராகவே கேப்டன்சியிலிருந்து விலகினார். எனவே டி காக் இனிமேல் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக தொடர்வார். இதற்கிடையே, டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு, ஏற்கனவே ஓய்வு அறிவித்த டிவில்லியர்ஸை மீண்டும் அணியில் சேர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 

அணி நிர்வாகம் அழைக்கும்போது, டிவில்லியர்ஸ் அணியில் இணைய தயாராக இருந்தால், அவர் ஃபார்மில் இருந்தால், அவர் கண்டிப்பாக டி20 உலக கோப்பையில் ஆடுவார் என்று தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தெரிவித்திருந்தார். 

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக ஆடியபோதும், இங்கிலாந்து அணி அதைவிட சிறப்பாக ஆடியதால், டி20 தொடரை இழந்தது தென்னாப்பிரிக்க அணி. இந்நிலையில், அடுத்ததாக தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலிய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் டிவில்லியர்ஸ் இடம்பெறவில்லை. டி காக் தலைமையிலான இந்த அணியில் பவுமா, டுப்ளெசிஸ், வாண்டெர் டசன், டேல் ஸ்டெய்ன், டேவிட் மில்லர் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 

பில்ஜோன், ப்ரிட்டோரியஸ், ஃபெலுக்வாயோ ஆகிய வீரர்களும் அணியில் உள்ளனர். 

Also Read - கடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டு துறையின் சிறந்த தருணம்.. லாரியஸ் விருதை வென்றார் சச்சின் டெண்டுல்கர்

தென்னாப்பிரிக்க டி20 அணி:

குயிண்டன் டி காக்(கேப்டன், விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா, டுப்ளெசிஸ், வாண்டெர் டசன், டேவிட் மில்லர், பில்ஜோன், ப்ரிட்டோரியஸ், ஃபெலுக்வாயோ, ஜேஜே ஸ்மட்ஸ், ரபாடா, ஷாம்ஸி, இங்கிடி, ஃபார்டியூன், நோர்ட்ஜே, டேல் ஸ்டெய்ன், கிளாசன்.