தென்னாப்பிரிக்க அணியை  வெறும் 227 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி. 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டி சவுத்தாம்ப்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக ஆம்லா மற்றும் டி காக் களமிறங்கினர். தொடக்கம் முதலே தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை எளிதாக ரன் அடிக்கவிடாமல் புவனேஷும் பும்ராவும் கட்டுப்படுத்தினர். 

பும்ரா வீசிய 2வது ஓவரில் பேட்டால் பந்தை தொடவே பயந்தார் டி காக். அந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. மீண்டும் 4வது ஓவரை வீசிய பும்ரா, ஆம்லாவை வீழ்த்தினார். 6 ரன்களில் ஆம்லாவை வீழ்த்தி பெவிலியனுக்கு அனுப்பினார். அவுட்சைடு எட்ஜாகி சென்ற பந்தை ரோஹித் அருமையாக கேட்ச் பிடித்தார். அதன்பின்னர் தனது அடுத்த ஓவரிலேயே டி காக்கை 10 ரன்களில் வெளியேற்றினார் பும்ரா. 

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் டுப்ளெசிஸும் வாண்டெர் டசனும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்பாக ஆடினர். அவசரப்படாமல் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். பும்ரா, புவனேஷ்வர் குமாரின் பவுலிங்கை மட்டுமல்லாமல் குல்தீப்பின் சுழலையும் சமாளித்து ஆடினர். ஆனால் சாஹலின் பவுலிங்கை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. 

மூன்றாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 54 ரன்கள் சேர்த்தனர். மெதுவாக நங்கூரம் போட்டுக்கொண்டிருந்த இவர்கள் இருவரையும் ஒரே ஓவரில் வீழ்த்தினார் சாஹல். 20வது ஓவரின் முதல் பந்தில் வாண்டெர் டசனை போல்டாக்கி அனுப்பிய சாஹல், அதே ஓவரின் கடைசி பந்தில் டுபிளெசிஸையும் போல்டாக்கி அனுப்பினார். 

80 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தது தென்னாப்பிரிக்க அணி. டேவிட் மில்லரும் டுமினியும் ஜோடி சேர்ந்து ஆடினர். இந்த அனுபவ ஜோடியாவது தென்னாப்பிரிக்காவை சரிவிலிருந்து மீட்குமா என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. டுமினியை 3 ரன்களில் அனுப்பினார் குல்தீப். பின்னர் மில்லரும் ஃபெலுக்வாயோவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து கொண்டிருந்த நேரத்தில் மில்லரை 31 ரன்களில் வீழ்த்தி மீண்டும் பிரேக் கொடுத்த சாஹல், ஃபெலுக்வாயோவையும் 34 ரன்களில் வீழ்த்தினார்.

40வது ஓவரில் தென்னாப்பிரிக்க அணியின் 7வது விக்கெட்டாக ஃபெலுக்வாயோ ஆட்டமிழக்கும்போது தென்னாப்பிரிக்க அணியின் ஸ்கோர் 158. அதன்பின்னர் 8வது விக்கெட்டுக்கு கிறிஸ் மோரிஸும் ரபாடாவும் இணைந்து பொறுப்பாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். 8வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 66 ரன்களை சேர்த்தனர். மோரிஸ் 42 ரன்களையும் ரபாடா 31 ரன்களையும் அடித்தனர். மோரிஸ் ரபாடா ஜோடியின் பொறுப்பான பேட்டிங்கால் 50 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 227 ரன்கள் அடித்தது. 

இந்திய அணிக்கு 228 ரன்கள் என்பது எளிய இலக்கு. எனவே இந்திய அணி வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.