இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, டெம்பா பவுமா மற்றும் வாண்டர் டசனின் அபார சதத்தால் 50 ஓவரில் 296 ரன்களை குவித்து, 297 ரன்கள் என்ற மிகச்சவாலான இலக்கை இந்தியாவிற்கு நிர்ணயித்துள்ளது. 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று பார்லில் நடந்துவருகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் ஒன்றரை மணிக்கு டாஸ் போடப்பட்டு, 2 மணிக்கு போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தென்னாப்பிரிக்க அணியில் மார்கோ யான்செனும், இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயரும் இந்தன் போட்டியின் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகினர்.

தென்னாப்பிரிக்க அணி:

குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ஜே மலான், எய்டன் மார்க்ரம், ராசி வாண்டெர் டசன், டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் மில்லர், ஆண்டில் ஃபெலுக்வாயோ, மார்கோ யான்சென், கேஷவ் மஹராஜ், டப்ரைஸ் ஷாம்ஸி, லுங்கி இங்கிடி.

இந்திய அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், ஷர்துல் தாகூர், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா.

முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ஜே மலானை வெறும் 6 ரன்னுக்கு இன்னிங்ஸின் 5வது ஓவரில் வீழ்த்தினார் பும்ரா. மற்றொரு தொடக்க வீரரான குயிண்டன் டி காக்கை 27 ரன்னில் க்ளீன் போல்டாக்கி அனுப்பினார் அஷ்வின். எய்டன் மார்க்ரம் வெறும் 4 ரன்னுக்கு ரன் அவுட்டாக, 68 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது தென்னாப்பிரிக்க அணி.

அதன்பின்னர் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டெம்பா பவுமா - வாண்டர் டசன் ஆகிய இருவரும் இந்திய அணியின் பவுலிங்கை மிகச்சிறப்பாக எதிர்கொண்டு ஆடினர். விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிய அதேவேளையில், வாண்டர் டசனின் அதிரடியான பேட்டிங்கால் தென்னாப்பிரிக்க அணியின் ஸ்கோரும் வேகமாக உயர்ந்தது.

பவுமா - டசன் ஜோடியை பிரிக்க இந்திய பவுலர்கள் திணறினர். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 204 ரன்களை குவித்தது. அபாரமாக விளையாடிய தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா சதமடிக்க, அவரைத்தொடர்ந்து டசனும் சதமடித்தார். 49வது ஓவரில் 110 ரன்களுக்கு பவுமா ஆட்டமிழந்தார். வாண்டர் டசன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 129 ரன்களை குவிக்க, 50 ஓவரில் 296 ரன்களை குவித்த தென்னாப்பிரிக்க அணி, 297 ரன்கள் என்ற மிகச்சவாலான இலக்கை இந்தியாவிற்கு நிர்ணயித்துள்ளது.