தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸை 502 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது இந்திய அணி. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளை விரைவிலேயே இழந்துவிட்டது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸை 502 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் மயன்க் அகர்வாலும் அபாரமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 317 ரன்களை குவித்தனர். ரோஹித் சர்மா 176 ரன்களை குவித்தார். அபாரமாக ஆடிய மயன்க் அகர்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை அடித்து அசத்தினார்.
தொடக்க வீரர்கள் இருவரும் அபாரமாக ஆடிய நிலையில், புஜாரா, கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி ஆகியோர் சோபிக்கவில்லை. இரண்டாம் நாள் ஆட்டம் முடிய ஒன்றே கால் மணி நேரத்திற்கு முன்னதாக இந்திய அணி முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் அடித்திருந்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கியது தென்னாப்பிரிக்க அணி. தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக மார்க்ரமும் எல்கரும் இறங்கினர். முதல் மூன்று ஓவர்கள் மட்டுமே ஃபாஸ்ட் பவுலர்கள் வீசினர். நான்காவது ஓவரை அஷ்வினிடம் கொடுத்தார் கேப்டன் கோலி. தன்னை நம்பி கேப்டன் பந்தை கொடுத்ததற்கு பலனாக 8வது ஓவரில் மார்க்ரமின் விக்கெட்டை வீழ்த்தினார் அஷ்வின். இந்திய அணியின் பிரைம் ஸ்பின்னரான அஷ்வினை, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடும் லெவனில் சேர்க்காமல் ஓரங்கட்டியதோடு, வெளிநாடுகளில் அஷ்வின் பிரைம் ஸ்பின்னர் கிடையாது என்று அணி நிர்வாகம் விளக்கமும் அளித்தது.
ஆனால் அஷ்வின் தான் டெஸ்ட் அணியின் பிரைம் ஸ்பின்னர் என்பதை கங்குலி, கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் வலியுறுத்தி கொண்டே இருந்தனர். அதேபோலவே 8வது ஓவரிலேயே முதல் விக்கெட்டை வீழ்த்தி கொடுத்தார் அஷ்வின்.
அதன்பின்னர் ஒன்றிரண்டு ஓவர்களில் அஷ்வினுக்கு விக்கெட் விழுகாததை அடுத்து ஒருசில ஓவர்கள் பிரேக் கொடுத்துவிட்டு, 17வது ஓவரில் மீண்டும் அஷ்வினை அழைத்தார் கோலி. திரும்ப வந்த அஷ்வின், அந்த ஓவரிலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தி கொடுத்தார். டி பிருய்னை 4 ரன்களில் அனுப்பிவைத்தார். இதையடுத்து களத்திற்கு வந்த டேன் பீட்டை ஜடேஜா ரன்னே எடுக்காமல் அவுட்டாக்கினார்.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் அடித்துள்ளது. எல்கரும் பவுமாவும் களத்தில் உள்ளனர்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Oct 3, 2019, 5:26 PM IST