இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடந்துவருகிறது. 

நேற்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. ரோஹித் சர்மா 14 ரன்களில் அவுட்டாக, மயன்க் அகர்வால் அபாரமாக ஆடி இந்த போட்டியிலும் சதமடித்தார். அரைசதம் அடித்த புஜாரா 58 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் விராட் கோலியும் ரஹானேவும் ஜோடி சேர்ந்து அபாரமாக ஆடி, நான்காவது விக்கெட்டுக்கு 178 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த ரஹானே 59 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அபாரமாக ஆடிய விராட் கோலி, இந்த ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 26வது சதத்தை பதிவு செய்த கோலி, அதன்பின்னர் அதிரடியாக ஸ்கோரை உயர்த்தியதோடு, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 7வது இரட்டை சதத்தை விளாசினார். விராட் கோலியும் ஜடேஜாவும் இணைந்து அபாரமாக ஆடி இந்திய அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

ஜடேஜா 91 ரன்களில் அவுட்டாக, இந்திய அணி முதல் இன்னிங்ஸை 601 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. விராட் கோலி 254 ரன்களை குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

முதல் டெஸ்ட் போட்டி நடந்த விசாகப்பட்டின ஆடுகளம் மந்தமாக இருந்தது. அந்த ஆடுகளத்தில் பந்து நன்றாக திரும்பியதால் ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமாக இருந்தது. இந்த போட்டி நடந்துவரும் புனே ஆடுகளம் ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமாக உள்ளது. பந்து நல்ல வேகத்துடன் எக்ஸ்ட்ரா பவுன்ஸும் ஆனது. அதுவும் புதிய பந்தில் ஃபாஸ்ட் பவுலர்கள் மிரட்டலாம். ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு ஆடுகளம் சாதகமாக இருந்தபோதிலும், ரபாடாவின் பவுலிங் பெரிதாக எடுபடவில்லை. ரபாடா, நோர்ட்ஜே ஆகிய இருவரும் அபாரமாக வீசினர். ஆனாலும் மயன்க், விராட் கோலி, புஜாரா, ரஹானே, ஜடேஜா ஆகியோர் அதை திறம்பட சமாளித்து ஆடினர். 

அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தும் விட வேண்டிய பந்துகளை விட்டும் தெளிவாக ஆடினர். ரோஹித் சர்மா ஒருவர் மட்டுமே அவசரப்பட்டு 14 ரன்களில் அவுட்டானார். அவரைத்தவிர மற்ற பேட்டிங் ஆடிய அனைத்து வீரர்களுமே குறைந்தது அரைசதம் அடித்தனர். 

இந்திய வீரர்கள் ஃபாஸ்ட் பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு ஆடிய நிலையில், இந்திய ஃபாஸ்ட் பவுலர்களின் வேகத்தை தென்னாப்பிரிக்க வீரர்களால் சமாளிக்க முடியவில்லை. இந்திய அணி 601 ரன்கள் என்ற மெகா ஸ்கோரை அடித்த பிறகு, முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களால், இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங்கை சமாளிக்க முடியவில்லை. 

இந்த போட்டியில் தன்னை அணியில் எடுத்ததை நியாயப்படுத்தும் விதமாக தனது முதல் ஓவரிலேயே மார்க்ரமை வீழ்த்தினார் உமேஷ் யாதவ். அதற்கடுத்த தனது ஓவரில் டீன் எல்கரையும் வீழ்த்தினார். நீ மட்டும் விக்கெட் போடுவியா.. நாங்கலாம் போடமாட்டோமா எனும் ரீதியாக, தான் வீசிய முதல் பந்திலேயே பவுமாவின் விக்கெட்டை எடுத்தார் முகமது ஷமி. 

இதையடுத்து அடுத்த பேட்ஸ்மேனின் விக்கெட்டையும் இழக்க விரும்பாத தென்னாப்பிரிக்க அணி நைட் வாட்ச்மேனாக நோர்ட்ஜேவை இறக்கியது. நோர்ட்ஜே, டி ப்ருய்னுடன் ஜோடி சேர்ந்து இன்றைய ஆட்டத்தை முடித்தனர். தென்னாப்பிரிக்க அணி இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் அடித்துள்ளது.