வங்கதேச அணிக்கு எதிரான 23ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பையின் 23ஆவது லீக் போட்டி தற்போது மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதற்கு முன்னதாக மும்பையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா முதலில் விளையாடி 399 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 170 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அதிகபட்சமாக 229 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பேருந்தில் சென்று கொண்டிருந்த போது லுங்கி டான்ஸ் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஆப்கானிஸ்தான் வீரர்கள்!
தென் ஆப்பிரிக்கா:
கெரால்டு கோட்ஸி, குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீஸா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சென், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம் (கேப்டன்), டேவிட் மில்லர், லிசாட் வில்லியம்ஸ், கஜிசோ ரபாடா, ரஸிவ் வான் டெர் டுசென்.
வங்கதேசம்:
ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ, லிட்டன் தாஸ், தன்சித் ஹசன் தமீம், முஷ்பிகுர் ரஹிம் (விக்கெட் கீப்பர்), மஹ்முதுல்லா ரியாத், மெஹிடி ஹசன் மிராஸ், நசுன் அகமது, முஸ்தஃபிஜூர் ரஹ்மான், ஹசன் மஹ்முத், ஷோரிஃபுல் இஸ்லாம்.
தற்போது அதே மைதானத்தில் நடக்கும் போட்டி என்பதால் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணியைப் பொறுத்த வரையில் டெம்பா பவுமா இந்தப் போட்டியிலும் இடம் பெறவில்லை. மேலும் லுங்கி நிகிடி முழங்கால் வலி காரணமாக இந்தப் போட்டியில் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக, லிசாட் வில்லியம்ஸ் இந்தப் போட்டியில் இடம் பெற்றுள்ளார்.
இதே போன்று இந்தப் போட்டியின் மூலமாக ஷாகிப் அல் ஹசன் அணியில் இடம் பெற்றுள்ளார். இந்தியாவிற்கு எதிரான போட்டியில் ஷாகிப் அல் ஹசன் இடம் பெறவில்லை. இன்றைய போட்டியில் தவ்ஹித் ஹிரிடோய் இடம் பெறவில்லை. இரு அணிகளும் இதற்கு முன்னதாக 4 முறை ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கின்றன.
கடந்த 2003 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் வங்கதேச அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2011 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா 206 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் வங்கதேச அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தற்போது இன்று மும்பையில் நடக்கும் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
