புனேவில் நடந்துவரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 601 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை இரண்டாம் நாள் இறுதியில் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, மூன்றாம் நாளான நேற்றைய ஆட்டமுடிவில் முதல் இன்னிங்ஸில் 275 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

ஃபாலோ ஆனை தவிர்ப்பதற்கான ஸ்கோரைக்கூட தென்னாப்பிரிக்க அணி தவிர்க்காமல் ஆல் அவுட்டானது. ஆனால் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் கூட, ஃபாலோ ஆன் கொடுப்பதற்கான வாய்ப்பிருந்தபோது, ஃபாலோ ஆன் கொடுக்காமல் இரண்டாவது இன்னிங்ஸையே ஆடியது. அதனால் இந்திய அணி ஃபாலோ ஆன் கொடுக்குமா அல்லது இரண்டாவது இன்னிங்ஸை ஆடுமா என்ற சந்தேகம் இருந்தது. 

ஆனால் இந்திய அணி ஃபாலோ ஆன் கொடுத்ததை தொடர்ந்து, நான்காம் நாளான இன்றைய ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, உணவு இடைவேளைக்கு முன்பாகவே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. உணவு இடைவேளைக்கு பின் டி காக்கின் விக்கெட்டும் பறிபோனது. இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களை கடந்து தென்னாப்பிரிக்க அணி ஆடிவருகிறது. 

இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு ஃபாலோ ஆன் கொடுத்ததன்மூலம் இந்திய அணி சாதனை ஒன்றை படைத்துள்ளது. இந்திய அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபாலோ ஆன் பெறுவது இதுதான் முதன்முறை. அதுமட்டுமல்லாமல் 2008ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 11 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க அணி எந்த அணிக்கு எதிராகவும் ஃபாலோ ஆன் பெற்றதில்லை. 11 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக இப்போதுதான் ஃபாலோ ஆன் பெற்றது.