தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. 

முதலில் டி20 தொடரும் அதைத்தொடர்ந்து டெஸ்ட் தொடரும் நடக்கிறது. முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டி நாளை(புதன்கிழமை) நடக்கிறது. குயிண்டன் டி காக் தலைமையில் தென்னாப்பிரிக்க அணி டி20 தொடரில் ஆடுகிறது. அதன்பின்னர் டுப்ளெசிஸ் தலைமையிலான அணி டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. 

சர்வதேச கிரிக்கெட்டில் எல்லா அணியிலும், திறமையின் அடிப்படையிலான போட்டிக்கும் சரி, சண்டைக்கும் சரி, விராட் கோலிக்கு ஒரு எதிரி இருப்பார். ஆஸ்திரேலியாவுடன் மோதினால் ஸ்மித் - கோலி, இங்கிலாந்துடன் மோதினால் ரூட் - கோலி என ஒவ்வொரு அணியிலும் ஒருவர் இருப்பார். கோலிக்கும் அந்த மற்றொரு வீரருக்கும் இடையேயான மோதல், பேசுபொருளாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். 

அந்தவகையில், இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான தொடரில் கோலிக்கும் ரபாடாவுக்கும் முட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பெஸ்ட் பேட்ஸ்மேன் கோலி - தென்னாப்பிரிக்காவின் பெஸ்ட் பவுலர் ரபாடா. எனவே கோலியை வீழ்த்தும் ஆயுதமாக தென்னாப்பிரிக்க அணியால் பார்க்கப்படும் ரபாடாவிற்கும் கோலிக்கும் இடையேயான போட்டி கடுமையாக இருக்கும். 

இந்நிலையில், இதுகுறித்து தென்னாப்பிரிக்க கேப்டன் குயிண்டன் டி காக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த குயிண்டன் டி காக், கோலி, ரபாடா ஆகிய இருவருமே சிறந்த வீரர்கள். அவர்கள் இருவருக்கும் இடையேயானா போட்டி அபாரமானது. இருவருமே ஆக்ரோஷமான வீரர்கள். எனவே அவர்களுக்கு இடையேயான போட்டியும் மோதலும் ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமையும் என்று குயிண்டன் டி காக் தெரிவித்துள்ளார்.