Asianet News TamilAsianet News Tamil

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா படுதோல்வி..! அபார வெற்றி பெற்று தென்னாப்பிரிக்கா 1-0 என தொடரில் முன்னிலை

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி, 1-0 என ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

South Africa beat India by 31 runs in first ODI and lead the series by 1 0
Author
Paarl, First Published Jan 19, 2022, 10:09 PM IST

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று பார்லில் நடந்தது. இந்திய நேரப்படி பிற்பகல் ஒன்றரை மணிக்கு டாஸ் போடப்பட்டு, 2 மணிக்கு போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தென்னாப்பிரிக்க அணியில் மார்கோ யான்செனும், இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயரும் இந்தன் போட்டியின் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகினர்.

தென்னாப்பிரிக்க அணி:

குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ஜே மலான், எய்டன் மார்க்ரம், ராசி வாண்டெர் டசன், டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் மில்லர், ஆண்டில் ஃபெலுக்வாயோ, மார்கோ யான்சென், கேஷவ் மஹராஜ், டப்ரைஸ் ஷாம்ஸி, லுங்கி இங்கிடி.

இந்திய அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், ஷர்துல் தாகூர், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா.

முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ஜே மலானை வெறும் 6 ரன்னுக்கு இன்னிங்ஸின் 5வது ஓவரில் வீழ்த்தினார் பும்ரா. மற்றொரு தொடக்க வீரரான குயிண்டன் டி காக்கை 27 ரன்னில் க்ளீன் போல்டாக்கி அனுப்பினார் அஷ்வின். எய்டன் மார்க்ரம் வெறும் 4 ரன்னுக்கு ரன் அவுட்டாக, 68 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது தென்னாப்பிரிக்க அணி.

அதன்பின்னர் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டெம்பா பவுமா - வாண்டர் டசன் ஆகிய இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து மிக அருமையாக பேட்டிங் ஆடினர். இந்திய பவுலிங்கை மிகத்திறம்பட எதிர்கொண்டு ஆடிய இருவருமே சதமடித்தனர்.  4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 204 ரன்களை குவித்தது. 49வது ஓவரில் 110 ரன்களுக்கு பவுமா ஆட்டமிழந்தார். வாண்டர் டசன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 129 ரன்களை குவிக்க, 50 ஓவரில் 296 ரன்களை குவித்த தென்னாப்பிரிக்க அணி, 297 ரன்கள் என்ற மிகச்சவாலான இலக்கை இந்தியாவிற்கு நிர்ணயித்தது.

297 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் தவானும் கோலியும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்திய ஒருநாள் அணியில் மீண்டும் கம்பேக் கொடுத்த ஷிகர் தவான், அருமையாக ஆடி அரைசதம் அடித்தார். 2வது விக்கெட்டுக்கு கோலியும் தவானும் இணைந்து 92 ரன்களை சேர்த்தனர். சிறப்பாக ஆடிய தவான் 79 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து அரைசதம் அடித்த மாத்திரத்தில் கோலியும் 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.

தவான், கோலி விக்கெட் விழுந்த பின், ரிஷப் பண்ட் (16), ஷ்ரேயாஸ் ஐயர் (17), வெங்கடேஷ் ஐயர் (2), அஷ்வின் (7) ஆகியோர் சீரான இடைவெளியில் சொற்ப ரன்களுக்கு வெளியேறியதால் இந்திய அணியின் தோல்வி உறுதியானது. ஆனால் ஷர்துல் தாகூர் மட்டும் கடைசிவரை தாக்குப்பிடித்து ஆடி ஆறுதல் அரைசதம் அடித்தார். இந்திய அணி 50 ஓவரில் 265 ரன்கள் மட்டுமே அடித்ததால், 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி 1-0 என ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios