உலக கோப்பை தொடரின் லீக் சுற்று நேற்றுடன் முடிந்தது. லீக் சுற்றின் கடைசி நாளில் 2 போட்டிகள் நடந்தன. அதில் ஒரு போட்டியில் இலங்கை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

மான்செஸ்டரில் நடந்த மற்றொரு போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணிக்கு மார்க்ரம் - டி காக் ஜோடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தது. அந்த தொடக்கத்தை நன்றாக பயன்படுத்தி டுப்ளெசிஸும் வாண்டெர் டசனும் இணைந்து பெரிய ஸ்கோரை நோக்கி அணியை அழைத்து சென்றனர். சிறப்பாக ஆடிய டுப்ளெசிஸ் சதமடித்து அசத்தினார். இந்த உலக கோப்பையில் தென்னாப்பிரிக்க வீரர் அடிக்கும் முதல் சதம் இது. 

சதமடித்த மாத்திரத்திலேயே 100 ரன்களில் டுப்ளெசிஸ் ஆட்டமிழக்க, வாண்டெர் டசனும் 95 ரன்களில் ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 325 ரன்களை குவித்தது. 

326 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வார்னர், ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் ஃபின்ச், ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் அவுட்டாகினர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய வார்னர், சதமடித்தார். ஆனால் அவர் 122 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் தென்னாப்பிரிக்க அணி நம்பிக்கை பெற்றது. ஆனால் அலெக்ஸ் கேரி பவுண்டரிகளை விளாசினார். 

அலெக்ஸ் கேரி 69 பந்துகளில் 85 ரன்களை குவித்தார். 46வது ஓவரில் அவரும் அவுட்டாக, அதன்பின்னர் ஆஸ்திரேலிய டெயிலெண்டர்களை தென்னாப்பிரிக்க பவுலர்கள் கட்டுப்படுத்தினர். இதையடுத்து 49.5 ஓவரில் 315 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட்டானதையடுத்து தென்னாப்பிரிக்க அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்திய அணி இலங்கையை வீழ்த்தி 15 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்ற நிலையில், ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியிருந்தால் 16 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்திருக்கும். ஆனால் தோற்றுவிட்டதால் இரண்டாவது இடத்திற்கு பின் தங்கிவிட்டது. 

இந்திய அணி 15 புள்ளிகளுடன் முதலிடத்திலும் ஆஸ்திரேலிய அணி 14 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் உள்ளன. மூன்றாமிடத்தில் இங்கிலாந்து அணியும் நான்காமிடத்தில் நியூசிலாந்து அணியும் உள்ளன. அரையிறுதி போட்டி முதலிடத்தில் இருக்கும் அணிக்கும் நான்காமிடத்தில் இருக்கும் அணிக்கும் இடையே நடக்கும் என்பதால், இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்தை மான்செஸ்டாரில் எதிர்கொள்ளவுள்ளது.