Asianet News TamilAsianet News Tamil

India vs South Africa: ஷமியின் வேகத்தில் சரணடைந்த தென்னாப்பிரிக்கா..! 200 ரன் கூட அடிக்காமல் ஆல் அவுட்

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி வெறும் 197 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 

south africa all out for just 197 runs in first innings of first test against india
Author
Centurion, First Published Dec 28, 2021, 9:20 PM IST

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் கடந்த 26ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்களை குவித்தது. இந்திய் அணியில் தொடக்க வீரர் கேஎல் ராகுல் அதிகபட்சமாக 123 ரன்களை குவித்தார். அவரது ஓபனிங் பார்ட்னரான மயன்க் அகர்வால் 60 ரன்களும், ரஹானே 48 ரன்களும் அடித்தனர். தென்னாப்பிரிக்க அணி சார்பில் இங்கிடி அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரபாடா 3 விக்கெட் வீழ்த்தினார்.

இந்த போட்டியின் 2ம் நாள் ஆட்டம் முழுவதுமாக மழையால் பாதிக்கப்பட்டதால், 3ம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் செசனில் தான் இந்திய அணி ஆல் அவுட்டானது. முதல் செசனில் அரை மணி நேரம் இருக்க, முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, பும்ரா வீசிய முதல் ஓவரிலேயே கேப்டன் எல்கரின் விக்கெட்டை இழந்துவிட்டது. எல்கர் வெறும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் மார்க்ரம் (13) மற்றும் கீகன் பீட்டர்சன் (15) ஆகிய இருவரையும் ஷமி வீழ்த்தினார். வாண்டெர் டசனை (3) சிராஜ் வீழ்த்த, 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க அணிக்கு, 5வது விக்கெட்டுக்கு டெம்பா பவுமாவும் டி காக்கும் இணைந்து சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்து 72 ரன்கள் சேர்த்தனர். டி காக்கை 34 ரன்களுக்கு வீழ்த்தி பிரேக் கொடுத்தார் ஷர்துல் தாகூர். அதன்பின்னர் முல்டர் (12) மற்றும் அரைசதம் அடித்த பவுமா (52) ஆகிய இருவரையும் ஷமி வீழ்த்த, மார்கோ ஜான்செனை 19 ரன்னில் ஷர்துல் தாகூர் வீழ்த்தினார்.

ரபாடா அடித்து ஆட, 25 ரன்கள் அடித்த அவரை ஷமி வீழ்த்தினார். இன்னிங்ஸின் 11வது ஓவரை தனது 6வது ஓவராக வீசிய பும்ரா, அந்த ஓவரை வீசும்போது வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டு களத்தைவிட்டு வெளியேறினார். அவர் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தாமல் பார்த்துக்கொண்ட ஷமி, 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆனாலும் பும்ரா இந்திய அணியின் முக்கியமான ஃபாஸ்ட் பவுலர் என்பதால், அவரது காயம் அணிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் காயத்தை சரி செய்துகொண்டு கடைசி நேரத்தில் வந்து பந்துவீசிய பும்ரா, கடைசி விக்கெட்டாக மஹராஜின் விக்கெட்டை வீழ்த்த, தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 197 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து 130 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது இந்திய அணி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios