பிசிசிஐ தலைவரானதுமே இந்தியாவில் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்துவதை உறுதி செய்துவிட்டார். இந்திய அணியின் கேப்டன் கோலியிடம் பேசி ஆதரவை பெற்று, உடனடியாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்துடனும் பேசி அவர்களது ஆதரவையும் பெற்று பகலிரவு டெஸ்ட் போட்டி நடத்துகிறார். 

உள்நாட்டு வீரர்களின் பொருளாதார நிலையை உயர்த்த, இந்திய அணியில் ஆடும் வீரர்களை போலவே, உள்நாட்டு வீரர்களுக்கு வருடாந்திர ஊதிய ஒப்பந்தம் போடப்படும் என தெரிவித்துள்ளார். தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவரான ராகுல் டிராவிட்டை பெங்களூருவிற்கு வந்து நேரில் சந்தித்து பேசிவிட்டு சென்றார். தேசிய கிரிக்கெட் அகாடமியை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தார். 

இதையடுத்து இளம் வீரர்களை வளர்த்தெடுப்பதற்கு அதிரடியான ஒரு திட்டத்தை வைத்திருப்பது தெரியவந்துள்ளது. ரிஷப் பண்ட், ப்ரித்வி ஷா, ஷுப்மன் கில் போன்ற இளம் வீரர்களின் ஆட்டத்திறனை மட்டுமல்லாது மனரீதியாகவும் அவர்களை மேம்படுத்தும் பணியை சச்சின் டெண்டுல்கரிடம் ஒப்படைக்க கங்குலி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

24 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய சச்சின் டெண்டுல்கரை விட ஒரு சிறந்த நபர், இந்த பணிக்கு வேறு யாராகவும் இருக்கமுடியாது. தேசிய கிரிக்கெட் அகாடமியில் இணைந்து இப்பணியை செய்யவுள்ளாரா அல்லது வேறு ஏதேனும் வழிவகுக்கப்படுகிறதா என்பதெல்லாம் இன்னும் உறுதியாகவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.