ஐபிஎல் 13வது சீசனில் டைட்டிலை ஐந்தாவது முறையாக வென்றது ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த சீசனின் இடையே தொடைப்பகுதி காயம் காரணமாக இடையில் சில போட்டிகளில் ஆடாத ரோஹித் சர்மா, நாக் அவுட் போட்டிகளில் மீண்டும் களமிறங்கி, ஃபைனலில் அருமையாக ஆடி அரைசதம் அடித்து மும்பை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார்.

ரோஹித் சர்மா காயம் காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் எடுக்கப்படவில்லை. ஆனால் இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் அவர் பயிற்சி செய்யும் வீடியோவை மும்பை இந்தியன்ஸ் டுவிட்டரில் பதிவிட்டது. ரோஹித் சர்மாவால் பயிற்சி செய்ய முடிகிறது என்றால், அது என்ன மாதிரியான காயம்? ரோஹித் சர்மா வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டாரா? போன்ற கேள்விகளும் அதைச்சுற்றி சர்ச்சைகளும் எழுந்தன.

ரோஹித் சர்மாவின் ஃபிட்னெஸ் கண்காணிக்கப்பட்டுவருவதாக பிசிசிஐ தெரிவித்திருந்த நிலையில், ரோஹித் சர்மா ஐபிஎல் நாக் அவுட் போட்டிகளில் ஆடிய நிலையில், விராட் கோலிக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியதால், ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார். 

ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில், அதற்கான காரணத்தை பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள கங்குலி, ரோஹித் 70 சதவிகிதம் மட்டும் ஃபிட்டாக இருக்கிறார். அதனால் தான் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் எடுக்கப்படவில்லை என்று கங்குலி தெரிவித்துள்ளார்.