லங்கா பிரீமியர் லீக் 2வது சீசனின் ஃபைனலிலும் முதல் சீசனின் ஃபைனலில் மோதிய கல்லே மற்றும் ஜாஃப்னா அணிகள் தான் மோதுகின்றன. 

ஸ்கை247 லங்கா பிரீமியர் லீக் தொடரின் 2வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. லீக் தொடரில் 20 போட்டிகள் மற்றும் நாக் அவுட்டில் 3 போட்டிகள் என மொத்தம் 23 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்த அனைத்து சவால்களையும் கடந்து கல்லே கிளாடியேட்டர்ஸ் மற்றும் ஜாஃப்னா கிங்ஸ் ஆகிய 2 அணிகளும் ஃபைனலுக்கு முன்னேறியுள்ளன.

கடந்த சீசனின் ஃபைனலில் மோதிய கல்லே மற்றும் ஜாஃப்னா அணிகள் தான் இந்த சீசனின் ஃபைனலிலும் மோதுகின்றன. கடந்த சீசனின் ஃபைனலில் கல்லே கிளாடியேட்டர்ஸ் அணியை ஜான்ஃபா ஸ்டாலியன்ஸ் அணி வீழ்த்தி கோப்பையை வென்றது. ஸ்டாலியன்ஸ் என்ற பெயரை மாற்றி கிங்ஸ் என வைத்து ஜாஃப்னா கிங்ஸ் அணியாக இந்த சீசனில் ஆடிய ஜாஃப்னா அணி, பெயரை மாற்றினாலும், ஆட்டத்தில் எந்த மாற்றமும் இல்லாமல், கடந்த சீசனை போலவே அபாரமாக ஆடி வெற்றி பெற்றது.

திசாரா பெரேரா தலைமையிலான ஜாஃப்னா கிங்ஸ் மற்றும் பானுகா ராஜபக்சா தலைமையிலான கல்லே கிளாடியேட்டர்ஸ் ஆகிய 2 அணிகளும் இன்று ஹம்பண்டோட்டாவில் நடக்கும் ஃபைனலில் இன்று மோதுகின்றன. மீண்டும் கோப்பையை வெல்லும் முனைப்பில் நடப்பு சாம்பியன் ஜாஃப்னா அணியும், கடந்த சீசனில் வாங்கிய அடிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் கல்லே கிளாடியேட்டர்ஸ் அணியும் ஃபைனலில் மோதுகின்றன.

இந்த சீசனில் தொடக்கம் முதலே ஜாஃப்னா கிங்ஸ் அணி அபாரமாக ஆடி தொடர் வெற்றிகளை பெற்றது. லீக் சுற்றில் 6 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து மிகவும் சவுகரியமாக பிளே ஆஃபிற்கு முன்னேறியது ஜாஃப்னா கிங்ஸ் அணி. ஜாஃப்னா கிங்ஸ் அணியில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ பேட்டிங்கில் அசத்தினார். ஷோயப் மாலிக், டாம் கோலர், ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகியோரும் சிறப்பாக பேட்டிங் ஆடினர். பவுலிங்கில் தீக்‌ஷனா முக்கிய பங்காற்றினார். 20 வயது இளம் ஃபாஸ்ட் பவுலரான ஜெய்டன் சீல்ஸ் அருமையாக பந்துவீசி அசத்தினார். ட்வைன் பிராவோ டெத் ஓவர்களில் அருமையாக வீசி ஜாஃப்னா அணியின் வெற்றிகளுக்கு காரணமாக திகழ்ந்தார். 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு சிறந்த பங்காற்றினார் பிராவோ.

ஜாஃப்னா கிங்ஸ் அணியை போல தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஸ்கை247 லங்கா பிரீமியர் லீக் தொடரில் இந்த சீசனின் தொடக்கத்திலிருந்தே வெற்றி - தோல்வி என இரண்டையும் மாறி மாறி பெற்றபோதிலும், அணியினரின் ஒட்டுமொத்தமான சிறப்பான ஆட்டத்தால் ஃபைனலுக்கு முன்னேறியது கல்லே கிளாடியேட்டர்ஸ் அணி. கல்லே அணியில் 37 வயது பவுலரான சமீத் படேல், அபாரமாக பந்துவீசி 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கல்லே அணியின் வெற்றிகளுக்கு அவரது பங்களிப்பு மிக முக்கியமானது.

ஸ்கை247 லங்கா பிரீமியர் லீக்-கில் சமபலம் வாய்ந்த, கடும் போட்டியாளர்களான கல்லே கிளாடியேட்டர்ஸ் - ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் இடையேயான ஃபைனல் பழைய பகை நிறைந்தது. எனவே இதைவிட ஒரு செம ட்ரீட் ரசிகர்களுக்கு இருக்க முடியாது. சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் முனைப்பில் ஜாஃப்னா கிங்ஸும், கடந்த சீசனில் வாங்கிய அடிக்கு பழிதீர்க்கும் முனைப்பில் கல்லே கிளாடியேட்டர்ஸ் அணியும் இன்றைய ஃபைனலில் மோதுகின்றன. வெற்றி யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.