”தாராவி தெருக்கள் டூ WPL” வறுமையுடன் கனவை துரத்தி சாதித்த சிம்ரன் ஷேக்..! சாதிக்க துடிப்பவர்களுக்கான உத்வேகம்

தாராவி தெருக்களில் பெரிய கனவுகளுடன் கிரிக்கெட் ஆடி, மகளிர் பிரீமியர் லீக் என்ற மிகப்பெரிய அரங்கில் கிரிக்கெட் ஆடுமளவிற்கு வளர்ந்துள்ள சிம்ரன் பானு ஷேக் என்ற வீராங்கனையின் வளர்ச்சி, எளிய மக்களுக்கு மிகச்சிறந்த உத்வேகமாக திகழ்கிறார்.
 

simran shaikh 21 year old women cricketer inspirational journey from dharavi streets to wpl

சாதிப்பதற்கு வயதோ, வறுமையோ தடையாக இருக்கவே முடியாது என்பதை மீண்டும் ஒரு முறை பறைசாற்றும் விதமாக, ஏழை குடும்பம், எளிய இடத்திலிருந்து வந்து சாதித்து காட்டியிருக்கிறார் கிரிக்கெட் வீராங்கனை சிம்ரன் ஷேக்.

உலகின் மிகப்பெரிய குடிசைப்பகுதி என்றால், மும்பையின் தாராவி தான். மும்பை நகரில் 550 ஏக்கர் பரப்பிலான, மக்கள் அடர்த்தி அதிகமான பகுதி தாராவி. அங்கு சுமார் 10 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். மும்பை மாநகரில் ஏழை, எளிய, உழைக்கும் மக்களுக்கான இடம் தாராவி. 

காஷ்மீரில் புத்தக புரட்சி.. “நூலக கிராமம்”..! வீட்டுக்கு வீடு நூலகம் அமைக்கும் இளைஞர் சிராஜுதின் கான்

அப்படிப்பட்ட தாராவியில் ஏழை குடும்பத்தில் வயர்மேன் தந்தைக்கு பிறந்த குழந்தை தான் சிம்ரன் ஷேக். சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்ட சிம்ரன் ஷேக், சிறுமியாக இருந்தபோதே தாராவி தெருக்களில் சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடியிருக்கிறார். எந்தவித பின்புலமும் இல்லாமல் விளையாட்டுத்துறையில் தனக்கான இடத்தையும் அங்கீகாரத்தையும் பெறுவது மிகக்கடினம். அதிலும் பெண் பிள்ளைகள் விளையாட்டுத்துறையை தேர்வு செய்து சாதிக்க துடிப்பதற்கு பெரும் தடைகள் இருக்கும். 

ஏழையாகவும் இருந்து, பெண் பிள்ளையாகவும் இருந்து தனது கனவுகளை விட்டுக்கொடுக்காமல் கடைசிவரை போராடி சாதித்து காட்டியவர் சிம்ரன் ஷேக். 21 வயது வலது கை பேட்ஸ்மேனான சிம்ரன் ஷேக், லெக் ஸ்பின் பவுலிங்கும் வீசக்கூடியவர். சிம்ரன் ஷேக்கை மகளிர் பிரீமியர் லீக்கிற்கான ஏலத்தில் ரூ.10 லட்சம் என்ற பெரிய தொகைக்கு யு.பி வாரியர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. 

சிம்ரன் ஷேக்கின் பெற்றோருக்கு மொத்தம் 7 பிள்ளைகள். 4 மகள்கள் மற்றும் 3 மகன்கள். வயர்மேனான அவர் சிம்ரன் ஷேக் உட்பட 7 பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்தார். ஏழையாக இருந்தாலும் தனது மகளின் கனவுக்கு தடையாக இல்லாமல் ஆதரவாக இருந்து உற்சாகமும் உத்வேகமும் அளித்து சிம்ரன் ஷேக்கை வளர்த்து சாதனையாளராக மாற்றியதில் அவரது பெற்றோருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. தனது உறவினர்களும் தனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்ததாக சிம்ரன் ஷேக் தெரிவித்துள்ளார். 

ஏழ்மை தனது கனவை எந்தவிதத்திலும் பாதிக்காத அளவிற்கு, ஏழ்மையுடன் தனது கனவை நனவாக்க போராடி சாதித்து காட்டிய சிம்ரன் ஷேக், சாதிக்க துடிக்கும் ஏழை எளிய இளைஞர்களுக்கு மிகப்பெரிய உத்வேகம்.

Source - Awaz The Voice 

IND vs AUS: அகமதாபாத் பிட்ச் இப்படித்தான் இருக்கணும்.. இல்லைனா ஆப்புதான்..! கவாஸ்கர் அதிரடி
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios