ஒருநாள் கிரிக்கெட்டில் ஒருகாலத்தில் இரட்டை சதம் என்பது குதிரைக்கொம்பாக இருந்தது. சயீத் அன்வர் அடித்த 194 ரன்கள் தான் ஒருநாள் கிரிக்கெட்டின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. 

ஆனால் பெரும்பாலான பேட்டிங் சாதனைகளை தன்னகத்தே கொண்ட சச்சின் டெண்டுல்கர், 2010ல் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக முதல் இரட்டை சதத்தை விளாசி, அந்த சாதனையையும் தனக்கு சொந்தமாக்கினார். 

முதல் இரட்டை சதத்தை சச்சின் விளாச, அவரை தொடர்ந்து சேவாக், ரோஹித் சர்மா, மார்டின் கப்டில், கிறிஸ் கெய்ல், ஃபகார் ஜமான் ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்தனர். அதிலும் ரோஹித் சர்மா 3 முறை இரட்டை சதம் விளாசினார். 

இலங்கைக்கு எதிராக 2014ல் 264 ரன்கள் என்ற மெகா ஸ்கோரை அடித்து, ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக திகழ்கிறார். ரோஹித்தின் இந்த சாதனையை இனிமேல் மற்றொரு வீரர் முறியடிப்பது என்பது நடக்காத காரியம். 

Also Read - முதல் முறையாக தன் மீதான விமர்சனத்துக்கும் கேலி கிண்டல்களுக்கும் பதிலடி கொடுத்த புஜாரா

சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டு கிரிக்கெட்டிலும் இரட்டை சதமடித்த வீரர்களாக சச்சின் டெண்டுல்கர், சேவாக், ரோஹித் சர்மா மற்றும் கெய்ல் ஆகிய நால்வரும் திகழ்கின்றனர். மார்டின் கப்டில் மற்றும் ஃபகார் ஜமான் ஆகிய இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்திருந்தால் கூட, டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்கள் இரட்டை சதம் அடித்ததில்லை.