இந்தியா ஏ அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் ஆடிவருகிறது. அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வென்று ஏற்கனவே தொடரை வென்றுவிட்டது. 

இந்நிலையில், மூன்றாவது போட்டி நடந்துவருகிறது. இந்த போட்டிக்கான அணியின் ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா ஏ அணி, முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணியை முதல் இன்னிங்ஸில் 194 ரன்களுக்கே இந்திய பவுலர்கள் சுருட்டினர். கிருஷ்ணப்பா கௌதம் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து 7 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா ஏ அணியின் முதல் மூன்று விக்கெட்டுகள் 14 ரன்களுக்கே விழுந்துவிட்டது. பிரியங் பன்சால் 3 ரன்களிலும் அபிமன்யூ 6 ரன்களிலும் மயன்க் அகர்வால் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட்டுகள் சரிந்ததால், 5ம் வரிசையில் பேட்ஸ்மேன் இறங்காமல் நதீம் இறக்கிவிடப்பட்டார். 14 ரன்களுக்கே இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், கில்லுடன் நதீம் களத்தில் உள்ளார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஏ அணி 3 விக்கெட் இழப்பிற்கு 23 ரன்களை எடுத்துள்ளது. 

முதல் இன்னிங்ஸில் ரன்னே எடுக்காமல் ஆட்டமிழந்த கில், இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதுடன், பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய அவசியத்திலும் இருக்கிறார்.