ஆக்சியோம் மிஷன் 4 இன் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் கேப்டன் சுபான்ஷு சுக்லா செரிமானம் மற்றும் தசை ஆரோக்கியம் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார். தசை சிதைவை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து அவர் ஆராய்ந்து வருகிறார்.

ஆக்சியோம் மிஷன் 4 (Ax-4) திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தற்போதுள்ள இந்திய விண்வெளி வீரர் குழு கேப்டன் சுபான்ஷு சுக்லா, முன்னோடி அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கல்விப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

சமீபத்தில், சுபான்ஷு சுக்லா இளம் இந்திய மாணவர்களை இலக்காகக் கொண்ட ஒரு கல்வி வீடியோவைப் பதிவுசெய்துள்ளார். இதில் மனிதர்களின் செரிமான அமைப்பு விண்வெளியின் தனித்துவமான சூழலுக்கு ஏற்ப எவ்வாறு செயல்படுகிறது என்பதை அவர் விளக்கியுள்ளார்.

விண்வெளியில் செரிமான அமைப்பு

பூமியின் ஈர்ப்பு விசையின் இல்லாத நுண்ணீர்ப்பு விசை (மைக்ரோகிராவிட்டி) சூழலில், இரைப்பை குடல் அமைப்பை கணிசமாகப் பாதிக்கிறது. சாதாரணமாக, ஈர்ப்பு விசை காரணமாக உணவு குழாய் சுருங்குவதன் மூலம் உணவு செரிமானப் பாதை வழியாக நகர்வதற்கு உதவுகிறது. விண்வெளியில், இந்த செயல்பாடு மெதுவாகிவிடும். செரிமானப் பாதையில் உணவு நகரும் வேகம் குறைந்துவிடும். இது செரிமானத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

உடலின் மேல் பகுதிக்கு திரவங்கள் நகர்வதும் செரிமான செயல்பாட்டை பாதிக்கிறது, சில சமயங்களில் அசௌகரியத்தையும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலில் மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது. மேலும், நுண்ணீர்ப்பு விசை குடல் நுண்ணுயிரிகளை மாற்றக்கூடும், இது ஊட்டச்சத்துக்கள் எவ்வாறு உடைக்கப்பட்டு உறிஞ்சப்படுகின்றன என்பதைப் பாதிக்கிறது. இது கவனமாக நிர்வகிக்கப்படாவிட்டால் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்.

Scroll to load tweet…

தசைகள் பற்றிய ஆய்வு

இந்த கல்வி முயற்சிக்கு இணையாக, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள கீபோ ஆய்வகத்தின் லைஃப் சயின்சஸ் க்ளோவ்பாக்ஸிற்குள் சுபான்ஷு சுக்லா முக்கியமான தசை ஆரோக்கிய ஆராய்ச்சியை நடத்தி வருகிறார். நுண்ணீர்ப்பு விசை எவ்வாறு தசை சிதைவை ஏற்படுத்துகிறது என்பதையும், இந்த இழப்பை எவ்வாறு தடுக்கலாம் அல்லது குறைக்கலாம் என்பதையும் புரிந்துகொள்வதற்காக அவரது ஆய்வு தசை ஸ்டெம் செல் வளர்ப்பில் கவனம் செலுத்துகிறது.

விண்வெளிப் பயணத்தில் தசை இழப்பு பிரச்சினை ஒரு முக்கிய சவாலாகும். சுக்லாவின் சோதனைகள் நீண்ட கால பயணங்களின்போது தசை ஆரோக்கியத்தை பராமரிக்கக்கூடிய சாத்தியம் குறித்தும் ஆராய்கிறார். இது பூமியில் ஏற்படும் மனிதர்களுக்கு ஏற்படும் தசை அசைவின்மை போன்ற பிரச்சினைகளுக்கு சிசிக்சை அளிக்க பயன்படும் சாத்தியத்தையும் கொண்டுள்ளது.

லைஃப் சயின்சஸ் க்ளோவ்பாக்ஸ் (Life Sciences Glovebox), நுண்ணீர்ப்பு விசை சூழலில் உயிரியல் மாதிரிகளை பாதுகாப்பாக கையாளும் சூழலை வழங்குகிறது. இது விரிவான செல் ஆய்வுகள் நடத்துவதற்கு முக்கியமானதாகும்.

சுக்லாவின் ஆராய்ச்சி தவிர, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள மற்ற விண்வெளி வீரர்களும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மூளை-கணினி தொடர்பான ஆய்வு, விண்வெளி வீரர்களின் மனநலம் குறித்த ஆய்வு உள்ளிட்டவை அதில் அடங்கும். இந்த ஆய்வுகள் அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் ஆதரவுடன் நடைபெறுகின்றன.

சுபான்ஷு சுக்லா தனது அறிவியல் கல்வி தொடர்பான விழிப்புணர்வு முயற்சிகள் மூலம் மனிதர்களின் விண்வெளிப் பயணம் குறித்த அறிவை மேம்படுத்த உதவுகிறார். இது அடுத்த தலைமுறை இந்திய மாணவர்கள் விண்வெளி மற்றும் உயிரியல் துறைகளில் ஈடுபட ஊக்குவிக்கும்.