ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை இறுதி போட்டி நடக்க உள்ளது. இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதுகின்றன. 

ஐபிஎல்லில் இதுவரை ஒருமுறை கூட இறுதி போட்டிக்கு தகுதிபெறாத ஒரே அணி டெல்லி கேபிடள்ஸ் தான். 2012ம் ஆண்டுக்கு பிறகு 6 சீசன்களுக்கு அடுத்து இந்த சீசனில் தான் டெல்லி அணி பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றது. இந்த சீசனில் கண்டிப்பாக சிறப்பாக ஆட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்ததால் ஏற்கனவே அணியில் பாண்டிங் தலைமை பயிற்சியாளராக இருந்தபோதும் கங்குலி ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 

பாண்டிங் ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் முதன்மையானவர். அவரது கேப்டன்சியில் 10 ஆண்டு காலம் ஆஸ்திரேலிய அணியை அசைக்கமுடியாத அணியாக நம்பர் 1 அணியாக வைத்திருந்தார். கங்குலியும் சளைத்தவர் அல்ல. இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் கங்குலியும் ஒருவர். இவ்வாறு தலைசிறந்த இரண்டு முன்னாள் கேப்டன்களை அணியின் பயிற்சியாளர் குழுமத்தில் பெற்றிருந்தது டெல்லி அணி.

ஷ்ரேயாஸ் ஐயர், பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், ரபாடா, லாமிசன்னே என நிறைய இளம் வீரர்களை கொண்ட டெல்லி அணியை பாண்டிங்கும் கங்குலியும் இணைந்து அபாரமாக வழிநடத்தி 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற வைத்தனர். அவர்களின் ஆலோசனையை பெற்று வீரர்களும் சிறப்பாக ஆடினர். 

எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி, இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கேவிடம் தோற்று இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது டெல்லி அணி. 

போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், ஜாம்பவான் பாண்டிங் குறித்து சிலாகித்து பேசினார். பாண்டிங் ஒரு லெஜண்ட். அவர் டிரெஸிங் ரூமில் அவர் எங்களிடம் பேசும்போது, அவர் பேசிய பேச்சுக்கு மறுவார்த்தை இருக்காது. அவர் கடகடவென பேசுவார். அவர் பேசுவதை கேட்கும்போது ஒரு பாட்டு கேட்பது போன்று இருக்கும். அப்படியொரு ஃப்ளோவில் பேசுவார். ஏனென்றால் அவர் 20 ஆண்டுகளாக அணியை வழிநடத்தும் பணியை அருமையாக செய்துகொண்டிருக்கிறார்.

இளம் வீரர்களான நாங்கள் ரிக்கி பாண்டிங்கை பயிற்சியாளராக பெற்றது எங்கள் அதிர்ஷ்டம். ஒவ்வொரு வீரருக்கும் சுதந்திரம் அளித்து அவரவர் போக்கில் ஆட அனுமதிக்கிறார். இளம் வீரர்களாக எங்களுக்கு அதுதான் முக்கியம். எங்களுக்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளிப்பது பாண்டிங் தான் என்று ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.