Asianet News TamilAsianet News Tamil

IND vs NZ அறிமுக டெஸ்ட்டில் சதத்தை நோக்கி Shreyas Iyer..! ஜடேஜா அரைசதம்.. சரிவிலிருந்து மீண்ட இந்தியா

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அறிமுகமாகியிருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் அறிமுக டெஸ்ட்டிலேயே அபாரமாக ஆடியுள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் - ஜடேஜா ஆகிய இருவரின் பொறுப்பான அரைசதத்தால் சரிவிலிருந்து மீண்ட இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் அடித்துள்ளது.
 

shreyas iyer playing towards his century and jadeja scores fifty and so india is in good position in first test against new zealand
Author
Kanpur, First Published Nov 25, 2021, 6:09 PM IST

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் கான்பூரில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி ஆடாததால், அவருக்கு பதிலாக அஜிங்க்யா ரஹானே கேப்டன்சி செய்கிறார். முதலில்  பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியில் மீண்டும் தொடக்க வீரராக இறங்க வாய்ப்பு பெற்ற மயன்க் அகர்வால் 13 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அதன்பின்னர் ஷுப்மன் கில்லும் புஜாராவும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். சிறப்பாக ஆடிய கில் அரைசதம் அடித்தார். ஆனால் கிடைத்த தொடக்கத்தை பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் 52 ரன்களில் ஜாமிசனின் பந்தில் போல்டாகி வெளியேறினார். 2வது விக்கெட்டுக்கு கில்லும் புஜாராவும் இணைந்து 61 ரன்கள் அடித்தனர்.

கில்லை தொடர்ந்து புஜாரா 26 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் கேப்டன் ரஹானேவுடன் ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். அண்மைக்காலமாக தொடர்ந்து சொதப்பிவரும் ரஹானே, ஒரு பெரிய இன்னிங்ஸ் தேவை என்ற கட்டாயத்தில் இந்த போட்டியில் ஆடிய நிலையில், அதை உணர்ந்து தெளிவாகவே ஆடினார். சிறப்பாக தொடங்கி நன்றாக ஆடிய ரஹானே, இந்த போட்டியில் பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 35 ரன்னில் ஜாமிசன் பந்தில் ஆட்டமிழக்க, இந்திய அணி 145 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயருடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். அறிமுக டெஸ்ட்டில் இந்திய அணி நெருக்கடியான நிலையில் இருந்த சூழலில், சிறப்பாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்தார். தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக ஆடினார் ஷ்ரேயாஸ் ஐயர். அவருடன் இணைந்து ஜடேஜாவும் சிறப்பாக ஆட, இருவரும் இணைந்து இந்திய அணிக்கு நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்து கொடுத்தனர்.

ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய ஜடேஜாவும் அரைசதம் அடித்தார். சதத்தை நோக்கி செல்லும் ஷ்ரேயாஸ் ஐயர் 75 ரன்களுடனும், ஜடேஜா 50 ரன்களுடனும் களத்தில் இருக்கும்நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது. முதல் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் அடித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios