டெல்லி கேபிடள்ஸ் அணியின் கேப்டன்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டது குறித்து மௌனம் கலைத்துள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர். 

ஐபிஎல்லில் 2015ம் ஆண்டிலிருந்து டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஆடிவந்த ஷ்ரேயாஸ் ஐயர், 2019ம் ஆண்டு ஐபிஎல் சீசனின் இடையே கௌதம் கம்பீர் கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து டெல்லி அணியின் கேப்டன்சி பொறுப்பை ஏற்று செயல்பட்டார். அவரது கேப்டன்சியில் 2020ம் ஆண்டு ஐபிஎல்லில் டெல்லி அணி முதல் முறையாக ஃபைனலுக்கு முன்னேறியது. ஆனால் மும்பை இந்தியன்ஸிடம் தோற்று முதல் முறையாக ஐபிஎல் டைட்டிலை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

ஷ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சியில் டெல்லி கேபிடள்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டுவந்தது. 2021ம் ஆண்டு ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாக, சர்வதேச போட்டி ஒன்றில் ஆடியபோது ஷ்ரேயாஸ் ஐயருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. 

இதையடுத்து 2021ம் ஆண்டு ஐபிஎல்லில், இந்தியாவில் நடந்த முதல் பாதி ஆட்டத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆடவில்லை. அதனால் ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ரிஷப் பண்ட்டின் கேப்டன்சி நன்றாக இருந்ததுடன், அவரது கேப்டன்சியில் டெல்லி அணி நன்றாகவே ஆடியது. அதனால், 2021ம் ஆண்டு ஐபிஎல் சீசனின் இரண்டாம் பாதியில் ஷ்ரேயாஸ் ஐயர் அணிக்குள் வந்தபின்னரும், அவர் கேப்டனாக நியமிக்கப்படாமல், ரிஷப் பண்ட்டே கேப்டனாக தொடர்ந்தார்.

அந்த சீசன் முடிந்ததையடுத்து, இந்த ஆண்டு நடக்கவுள்ள 15ம் சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடந்தது. அதனால் ஏலத்திற்கு முன் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்கவைக்கலாம் என்ற நிலையில், டெல்லி அணி ஷ்ரேயாஸ் ஐயரை தக்கவைக்கவில்லை. புதிய கேப்டனை எதிர்நோக்கியிருந்த கேகேஆர் அணி, ஷ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமிக்கும் நோக்கில் அவரை ரூ.12.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. எனவே இந்த சீசனிலிருந்து கேகேஆர் அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர்.

ஐபிஎல் 15வது சீசன் வரும் 26ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இலங்கைக்கு எதிராக ஆடிய 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகளிலும் அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் ஐயர், ஒரு போட்டியில்கூட அவுட்டாகவில்லை. 3 டி20 போட்டிகளில் 204 ரன்களை குவித்து, தொடர்நாயகன் விருதையும் ஷ்ரேயாஸ் ஐயரே வென்றார்.

இந்திய டி20 அணியில் தன்னை புறக்கணிக்க முடியாத அளவிற்கு சிறப்பாக ஆடியுள்ள ஷ்ரேயாஸ் ஐயர், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் தனக்கான இடத்தை பிடிக்கும் முனைப்பில் இருக்கிறார். எனவே அதற்காக தன்னை மீண்டுமொரு முறை நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், இந்த ஐபிஎல் சீசனை வெகுவாக எதிர்நோக்கியுள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர். செம ஃபார்மில் இருக்கும் ஷ்ரேயாஸ், கண்டிப்பாக இந்த ஐபிஎல்லில் தெறிக்கவிடுவார் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து பேசிய ஷ்ரேயாஸ் ஐயர், காயம் காரணமாகத்தான் டெல்லி கேபிடள்ஸ் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டேன். ஒருவேளை எனக்கு காயம் ஏற்படாமல் இருந்திருந்தால், என்னை டெல்லி அணி கேப்டன்சியிலிருந்து நீக்கியிருக்காது. டெல்லி அணியின் வீரர்களுக்கு இடையே நல்ல புரிதல் இருந்தது. இந்த விஷயத்தில் இதற்கு மேல் ஆழமாக செல்ல விரும்பவில்லை என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசிய ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.