வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

முதல் போட்டி நடந்த சென்னை சேப்பாக்கம் ஆடுகளம், மந்தமானது. பவுலிங்கிற்கு சாதகமான அந்த ஆடுகளத்தில் 288 ரன்கள் என்ற சவாலான இலக்கை வெஸ்ட் இண்டீஸ் அணி அசால்ட்டாக அடித்து வெற்றி பெற்றுவிட்டது. 

எனவே பேட்டிங்கிற்கு சாதகமான விசாகப்பட்டினம் ஆடுகளத்தில் கண்டிப்பாக 350 ரன்களே போதாது. அதுமட்டுமல்லாமல் விசாகப்பட்டினம் மைதானமும் சிறியது. எனவே மெகா ஸ்கோரை அடித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை அறிந்து, ரோஹித்தும் ராகுலும் மெகா ஸ்கோரை அடிப்பதற்கான சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்தர். இருவருமே அபாரமாக ஆடி சதமடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 227 ரன்களை குவித்து கொடுத்தனர். 

ராகுல் 102 ரன்களும் ரோஹித் சர்மா 159 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர்.  விராட் கோலி முதல் பந்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயரும் ரிஷப் பண்ட்டும் இணைந்து அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். 45 ஓவர்கள் வரை இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் அடித்திருந்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் 79 ரன்களை குவித்தது இந்திய அணி. அந்த 79 ரன்களில் 55 ரன்கள் வெறும் இரண்டே ஓவரில் அடிக்கப்பட்டது. 

கோட்ரெல் வீசிய 46வது ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் என மொத்தம் 24 ரன்களை சேர்த்தார் ரிஷப் பண்ட். ரிஷப் பண்ட்டின் அதிரடி பேட்டிங்கிலிருந்து ரசிகர்கள் வெளிவரும் முன்னதாக, அடுத்த ஓவரில் அதைவிட மிரட்டலாக ஆடினார் ஷ்ரேயாஸ் ஐயர். 

ரோஸ்டான் சேஸ் வீசிய அடுத்த(47வது) ஓவரின் முதல் பந்து நோ பால். அந்த பந்தில் ஒரு சிங்கிள் எடுக்கப்பட்டது. மீண்டும் வீசப்பட்ட முதல் பந்தில் ரிஷப் சிங்கிள் எடுத்தார். அந்த ஓவரில் அடுத்த 5 பந்துகளை எதிர்கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர், 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசினார். ஷ்ரேயாஸ் ஐயர் 5 பந்தில் 28 ரன்களை குவிக்க, முதல் பந்தில் 3 ரன்கள் என மொத்தமாக அந்த ஓவரில் 31 ரன்கள் அடிக்கப்பட்டது. 

சாதனை:

இந்த 31 ரன்கள் தான் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பில் ஒரு ஓவரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்கு ஒரு ஓவரில் அதிகபட்ச ரன்களை சேர்த்து கொடுத்த வீரர்கள் என்ற சாதனையை ஷ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பண்ட் படைத்துள்ளனர். இதில் ரிஷப் பண்ட்டின் பங்களிப்பு ஒரு ரன் தான். ஷ்ரேயாஸ் ஐயர் 29 ரன்களை குவித்தார். ஒரு ரன் எக்ஸ்ட்ரா.

இதற்கு முன்னர், சச்சின் டெண்டுல்கரும் அஜய் ஜடேஜாவும் இணைந்து 1999ல் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு ஓவரில் 28 ரன்கள் அடித்தது தான், இந்திய அணி ஒரு ஓவரில் அடித்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஜாகீர் கான் - அகார்கர் ஜோடி உள்ளது. இந்த ஜோடி 2000ம் ஆண்டில் ஜிம்பாப்வேவிற்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 27 ரன்களை குவித்துள்ளது. 

ரோஹித் - ராகுலின் அபாரமான தொடக்கம் மற்றும் ஷ்ரேயாஸ் - ரிஷப்பின் அதிரடியான ஃபினிஷிங்கின் விளைவாக  இந்திய அணி 50 ஓவரில் 387 ரன்களை குவித்து, வெஸ்ட் இண்டீஸை 280 ரன்களுக்கு சுருட்டி 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.