யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீராங்கனை ஷோபனா ஆஷா 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் நேற்று தொடங்கியது. இதில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து தற்போது பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 2ஆவது போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், சப்பினேனி மேகனா 44 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதே போன்று விக்கெட் கீப்பரான ரிச்சா கோஷ் 37 பந்துகளில் 12 பவுண்டரி உள்பட 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் குவித்தது.
பின்னர் 158 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு யுபி வாரியர்ஸ் அணி விளையாடியது. இதில், கேப்டன் அலீசா ஹீலி 5 ரன்களில் ஆட்டமிழந்தார். விருந்தா தினேஷ் 18 ரன்களில் ஷோபனா ஆஷா பந்தில் ஆட்டமிழந்தார். தஹிலா மெக்ராத் 22 ரன்னிலும், கிரேஸ் ஹாரிஸ் 38 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இருவரும் ஆஷா பந்தில் கிளீன் போல்டானார்கள்.
அடுத்து வந்த கிரன் நவ்கிரே ஒரு ரன்னில் ஷோபனா ஆஷா பந்தில் நடையை கட்டினார். இதன் மூலமாக இந்த சீசனில் 2ஆவது போட்டியிலேயே 5 விக்கெட்டுகள் கைப்பற்றி ஆஷா சாதனை படைத்துள்ளார். 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த சீசனில், மரிசான் கேப் 5/15 (4), தாரா நோரிஸ் 5/29 (4) மற்றும் கிம் கார்த் 5/36 (4) ஆகியோர் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர்.
