கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுவருகிறார் ஷோயப் மாலிக். ஷோயப் மாலிக் தலைமையிலான வாரியர்ஸ் அணி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 

முதல் தகுதிச்சுற்று போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும் பார்படோஸ் ட்ரைடண்ட்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வாரியர்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரண்டன் கிங் அதிரடியாக ஆடி 132 ரன்களை குவித்தார். கேப்டன் ஷோயப் மாலிக் 32 ரன்களையும் சந்தர்பால் ஹேம்ராஜ் 27 ரன்களையும் அடிக்க, வாரியர்ஸ் அணி, 20 ஓவரில் 218 ரன்களை குவித்தது. 

219 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ட்ரைடண்ட்ஸ் அணி 188 ரன்கள் அடித்து 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த போட்டியில் வென்ற வாரியர்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இந்த போட்டியில் 32 ரன்கள் அடித்த ஷோயப் மாலிக், டி20 கிரிக்கெட்டில் 9000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இது அனைத்து டி20 போட்டிகளையும் உள்ளடக்கிய ரெக்கார்டு. சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமல்லாது, பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் டி20 லீக் தொடர்களின் போட்டிகளையும் சேர்த்தது. இந்திய வீரர்கள் சர்வதேச டி20 போட்டிகள் மற்றும் ஐபிஎல்லில் மட்டுமே ஆடுகின்றனர். ஆனால் மற்ற அனைத்து நாட்டு வீரர்களும் தாங்கள் விரும்பும் அனைத்து டி20 லீக் தொடர்களிலும் ஆடிவருகின்றனர். 

டி20 கிரிக்கெட்டில் 9000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய நான்காவது வீரர் என்ற சாதனையை ஷோயப் மாலிக் படைத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த நான்காவது வீரராக மாலிக் திகழ்கிறார். மாலிக் மொத்தமாக 335 டி20 இன்னிங்ஸ்களில் ஆடி, 9014 ரன்களை குவித்து நான்காமிடத்தில் உள்ளார். 

டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் 386 இன்னிங்ஸ்களில் 13,051 ரன்களை குவித்த கெய்ல் முதலிடத்திலும் 9922 ரன்களுடன் பிரண்டன் மெக்கல்லம் இரண்டாமிடத்திலும் 9757 ரன்களை குவித்த பொல்லார்டு மூன்றாமிடத்திலும் உள்ளனர். இவர்களுக்கு அடுத்த இடத்தில் ஷோயப் மாலிக் உள்ளார்.