பாகிஸ்தானில் டி20 சூப்பர் லீக் தொடர் நடந்துவருகிறது. பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் முல்தான் சுல்தான்ஸ், கராச்சி கிங்ஸ், குவெட்டா கிளாடியேட்டர்ஸ், இஸ்லாமாபாத் யுனைடெட், பெஷாவர் ஸால்மி மற்றும் லாகூர் காலண்டர்ஸ் ஆகிய அணிகள் ஆடிவருகின்றன. 

இந்த சீசனில் லாகூர் காலண்டர்ஸ் அணி படுமோசமாக ஆடி தோல்விகளை குவித்துவருகிறது. இதுவரை 4 போட்டிகளில் ஆடி ஒரேயொரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. முதல் மூன்று போட்டிகளிலும் தோற்ற லாகூர் அணி, குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் தான் முதல் வெற்றியை பதிவு செய்தது. 

முல்தான் சுல்தான்ஸ் மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகள் தான் புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் டாப் 4 இடங்களுக்குள் உள்ளன. இவற்றில் லாகூர் அணி தான் படுமோசமாக ஆடிவருகிறது. 

குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பென் டன்க் மற்றும் சமீத் படேலின் அதிரடியால் அந்த அணி 209 ரன்களை குவித்து, குவெட்டா அணியை 172 ரன்களுக்கு சுருட்டி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்நிலையில், லாகூர் அணி இதுவரை ஆடிய 4 போட்டிகளில் ஒன்றில் கூட சரியாக ஆடாத அந்த அணியின் தொடக்க வீரர் ஃபகார் ஜமானை அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார். ஃபகார் ஜமான் 4 போட்டிகளிலும் சேர்த்தே வெறும் 74 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அவரது சராசரி வெறும் 24.66 ரன்கள் மட்டுமே. 

குவெட்டா அணிக்கு எதிரான போட்டியில் கூட சரியாக ஆடாமல் 14 பந்தில் வெறும் 15 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். ஏதோ பென் டன்க்கின் அதிரடியால் அந்த அணி 200 ரன்களை கடந்தது. ஃபகார் ஜமானின் முதிர்ச்சியற்ற மோசமான பேட்டிங்கை பார்த்த அக்தர், ஃபகார் ஜமான் சூழலை உணர்ந்து ஆடுவதில்லை என்று விமர்சித்துள்ளார். 

ஃபகார் ஜமான் குறித்து பேசிய அக்தர், ஃபகர் ஜமானுக்கு மூளையே இல்லை. மறுமுனையில் கிறிஸ் லின் அதிரடியாக ஆடும்போது, ஃபகர் ஜமான் ஒரு பார்ட்னராக சூழலை உணர்ந்து நிதானமாக பேட்டிங் ஆட வேண்டும். லின் அதிரடியாக ஆடும் நிலையில், அவரும் அடித்து ஆட வேண்டிய அவசியம் இல்லை. ஆஸ்திரேலிய ஆடுகளங்களை போல பந்து நன்றாக பவுன்ஸ் ஆனதால், லின் மிகச்சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார். லின் ஆக்ரோஷமான அதிரடி வீரர். ஒருவர் அடித்து ஆடினால் போதுமானது. லாகூர் அணியின் பேட்டிங் ஆர்டரே புரிதல் இல்லாத பேட்டிங் ஆர்டராகத்தான் உள்ளது. முதல் 6 ஓவர்களில் பவர்ப்ளேயில் ரிஸ்க் எடுத்து பெரிய ஷாட்டுகளை ஆடலாம். ஆனால் அடுத்த 14 ஓவர்கள் களத்தில் நிலைத்து சூழலை உணர்ந்து பேட்டிங் ஆட வேண்டும். மிடில் ஓவர்கள் விரைவான சிங்கிள்களை எடுத்து, வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று அக்தர் தெரிவித்துள்ளார். 

Also Read - ஹெலிகாப்டர் ஷாட்டை கண்டுபிடித்த தோனி கூட இப்படி ஒரு ஹெலிகாப்டரை பறக்கவிட்டது இல்ல.. ரஷீத்தின் வேற லெவல் வீடியோ

அக்தர், மூளையே இல்லை என்று விமர்சித்துள்ள ஃபகர் ஜமான், ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த 6 வீரர்களில் ஒருவர். சச்சின், சேவாக், ரோஹித் சர்மா, கெய்ல், மார்டின் கப்டில் ஆகியோரின் வரிசையில் ஃபகர் ஜமானும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.