வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இந்திய அணி, டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை வென்றது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்குகிறது. 

இந்த போட்டியில் இந்திய அணி 7 பேட்ஸ்மேன்கள் மற்றும் 4 பவுலர்களுடன் களமிறங்கும். மயன்க் அகர்வால், ராகுல், புஜாரா, கோலி, ரஹானே, ரிஷப் பண்ட் ஆகிய 6 பேர் ஆடுவது உறுதி. 7வது பேட்ஸ்மேனாக ரோஹித் - ஹனுமா விஹாரி ஆகிய இருவரில் ஒருவர் எடுக்கப்படுவார். 

ரோஹித் சர்மா நல்ல ஃபார்மில் இருப்பதால் மீண்டும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார். அவர் நல்ல ஃபார்மில் ஆடிக்கொண்டிருப்பதால் அவர்தான் இந்த போட்டியில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவை கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என அவருக்கு ஆதரவாக ஷோயப் அக்தர் குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய அக்தர், ரோஹித் இதற்கு முன் டெஸ்ட் போட்டியில் ஆட கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் அவர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் போட்டியில் கண்டிப்பாக இடம்பெறுவார் என நம்புகிறேன். 

ரோஹித் சர்மா ஒரு மேட்ச் வின்னர். அதனால் அவரை அணியில் எடுக்கவில்லை என்றால் அது பெரிய தவறாக அமைந்துவிடும். அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். டெஸ்ட் அணியில் அவரை சேர்த்துவிட்டு, ஆடும் லெவனில் எடுக்கவில்லை என்றால் அது சரியாக இருக்காது. ரோஹித் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தனது திறமையை நிரூபிப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தலைசிறந்த வீரராக ரோஹித் சர்மா உருவெடுப்பார் என எனக்கு நம்பிக்கையுள்ளது என்று ரோஹித்துக்கு ஆதரவாக ஷோயப் அக்தர் குரல் கொடுத்துள்ளார். 

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரராக வலம்வரும் ரோஹித் சர்மாவிற்கு, டெஸ்ட் கெரியர் இதுவரை நன்றாக அமையவில்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதம் விளாசிய ஒரே வீரராக கெத்தாக வலம்வரும் ரோஹித் சர்மா, அசால்ட்டாக சதம் விளாசக்கூடியவர். ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் பல சாதனைகளை குவித்து தலைசிறந்த வீரராக திகழும் ரோஹித், அவருக்கு கிடைத்த டெஸ்ட் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. அதனால் டெஸ்ட் அணியில் அவ்வப்போது சேர்க்கப்படுவதும் நீக்கப்படுவதுமாக இருக்கிறார். தற்போது நல்ல ஃபார்மில் உள்ளதால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். 

அவர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கண்டிப்பாக நல்ல இன்னிங்ஸை ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அவர் நன்றாக ஆடினால் மட்டும்தான் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும்.