பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கர்நாடக அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுலும் தேவ்தத் படிக்கல்லும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவருமே அரைசதம் அடித்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 137 ரன்களை சேர்த்தனர். ராகுல் 58 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த கருண் நாயர் இந்த போட்டியிலும் சோபிக்காமல் 4 ரன்களில் வெளியேறினார். அருமையாக ஆடிய படிக்கல் 79 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் மனீஷ் பாண்டே பொறுப்பாக ஆடி அரைசதம் அடித்தார். மனீஷ் பாண்டே 62 ரன்கள் அடித்தார். 

ரோஹன் கடம், கிருஷ்ணப்பா கௌதம், மிதுன் ஆகியோர் தங்கள் பங்கிற்கு ரன்களை சேர்த்து கொடுக்க, கர்நாடக அணி 50 ஓவரில் 312 ரன்களை குவித்தது. 313 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் யாஷாஷ்வி ஜெய்ஸ்வால் 22 ரன்னிலும் ஆதித்ய தரே 32 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

சித்தேஷ் லத் 34, ஷ்ரேயாஸ் ஐயர் 11, சூர்யகுமார் 26 என அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். ஷிவம் துபேவும் சூர்யகுமாரும் இணைந்து நன்றாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், சூர்யகுமார் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அதுவரை நிதானமாக ஆடி விக்கெட்டை இழந்துவிடாமல் பொறுமையாக ரன்களை சேர்த்துக்கொண்டிருந்த ஷிவம் துபே, சூர்யகுமார் ஆட்டமிழந்த பிறகு, ருத்ரதாண்டவம் ஆட ஆரம்பித்தார். 

அதன்பின்னர் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி கர்நாடக அணியை கதிகலங்கவிட்டார். அதிரடியாக ஆடி சதமடித்த ஷிவம் துபே, 67 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 118 ரன்களை குவித்தார். ஷிவம் துபே ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்ததால், அடித்து ஆட வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனாலும் இன்னும் 3 விக்கெட்டுகள் எஞ்சியிருந்ததாலும், தேவைப்படும் ரன்ரேட் கட்டுக்குள் இருந்ததாலும் துபே சற்று பொறுமையாக ஆடியிருக்கலாம். ஆனால் அவசரப்பட்டு 42வது ஓவரிலேயே ஆட்டமிழந்துவிட்டார். 

மும்பை அணியின் ஸ்கோர் 277 ரன்களாக இருந்தபோது துபே 118 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் கடைசி வரிசை வீரர்கள் 303 ரன்கள் வரை இழுத்து கொண்டு சென்றனர். 11 பந்துகள் இன்னும் எஞ்சியிருந்த நிலையில், 49வது ஓவரின் முதல் பந்தில் மும்பை அணி 303 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 

துபே அவசரப்படாமல் நின்றிருந்தால், இலக்கை எளிதாக எட்டி வெற்றி பெற்றிருக்கலாம். தனி ஒருவனாக போராடி, வெற்றிக்கு அருகில் அழைத்து சென்ற துபேவால், அணியை வெற்றி பெற செய்யமுடியவில்லை. ஆனால் ஷிவம் துபேவின் பேட்டிங் அபாரம்.