வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியில் 7 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்தியாவிற்கு வந்துள்ளது. வரும் 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் அகமதாதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்லும், வரும் 16, 18, 20 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டனிலும் நடக்கவுள்ளன. 

இரு அணிகளும் இந்த தொடருக்காக தீவிரமாக தயாராகிவருகின்றன. முதல் ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இந்திய வீரர்கள் ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் நவ்தீப் சைனி(ஸ்டாண்ட் பை வீரர்) ஆகிய நால்வருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இந்திய அணியின் பவுலிங் கோச் டி திலீப், செக்கியூரிடி அதிகாரி பி.லோகேஷ் மற்றும் மசாஜ் தெரபிஸ்ட் ராஜீவ் குமார் ஆகிய மூவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இந்திய வீரர்கள் நால்வர் மற்றும் சப்போர்ட் ஸ்டார்ஃப் மூவர் என மொத்தம் 7 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

வரும் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் ஒருநாள் போட்டி நடக்கவுள்ளதால் அதற்குள்ளாக இவர்கள் கொரோனாவிலிருந்து மீண்டு குவாரண்டினை முடித்து போட்டியில் ஆடுவது சந்தேகம் என்பதால், இந்திய ஒருநாள் அணியில் மயன்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட வீரர்களில் ஷிகர் தவான் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இருவருமே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள். எனவே டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான மயன்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மிடில் ஆர்டரில் பிரச்னையில்லை. சூர்யகுமார் யாதவ் இருக்கிறார். கேஎல் ராகுலும் மிடில் ஆர்டரில் ஆடக்கூடியவர்.