இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷிகர் தவான். 2013லிருந்து ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்கி அசத்திவந்த தவான், கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாக பெரிதாக எந்த இன்னிங்ஸும் ஆடவில்லை. டெஸ்ட் அணியில் இடத்தை இழந்த தவானின் ஒருநாள் மற்றும் டி20 இடங்களுக்கும் ஆப்பு தயாராகி கொண்டிருக்கிறது.

கேஎல் ராகுல், மயன்க் அகர்வால், ஷுப்மன் கில், பிரித்வி ஷா என ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்க ஒரு பெரும்படையே தயாராக உள்ள நிலையில் தவானோ, தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக்கொள்ளும் வகையில் மோசமாக ஆடிவருகிறார்.

ஐபிஎல் 13வது சீசனின் தொடக்கத்தில் மந்தமாக பேட்டிங் ஆடினாலும், பிரித்வி ஷா நீக்கப்பட்ட பிறகு, பொறுப்பை உணர்ந்து அடித்து ஆடி சில நல்ல இன்னிங்ஸ்களை ஆடினார். ஆனால் நடந்துவரும் விஜய் ஹசாரே தொடரில் படுமோசமாக சொதப்பிவருகிறார். 

டெல்லி அணியில் ஆடும் தவான், விஜய் ஹசாரே தொடங்கியதிலிருந்தே சரியாக ஆடவில்லை. வியாழக்கிழமை இமாச்சல பிரதேச அணிக்கு எதிராக நடந்த போட்டியில்  அந்த அணி நிர்ணயித்த 252 ரன்கள் என்ற இலக்கை த்ருவ் ஷோரே(51), க்‌ஷிதிஷ் ஷர்மா(67), லலித் யாதவ்(52) ஆகியோரின் பொறுப்பான அரைசதம் மற்றும் நிதிஷ் ராணாவின் முக்கியமான 42 ஆகியவற்றின் விளைவாக இலக்கை எட்டி டெல்லி அணி வெற்றி பெற்றது,

இந்த போட்டியிலும் ஒரு ரன் கூட அடிக்காமல் 9 பந்துகள் மட்டுமே ஆடி டக் அவுட்டாகி வெளியேறினார்.  இதே நிலை தொடர்ந்தால், இந்திய அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் வரிசை கட்டி நிற்கும் நிலையில், அணியில் இடத்தை இழந்துவிடுவார் தவான்.