சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக விராட் கோலியும் ஸ்டீவ் ஸ்மித்தும் திகழும் நிலையில், அவர்களில் யார் பெஸ்ட் என்ற ஒப்பீடு தொடர்ந்து நடந்துகொண்டேயிருக்கிறது. சமகாலத்தின் இரண்டு சிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்வதால் இந்த ஒப்பீடு தவிர்க்கமுடியாதது.

ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித் சாதனைகளை படைத்துவருகிறார். 

விராட் கோலி மரபார்ந்த பேட்டிங் ஸ்டைலை கொண்டவர். அவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது பேட்டிங் திறனை வளர்த்துக்கொண்டு தலைசிறந்த பேட்ஸ்மேன் என்று அனைவராலும் பாராட்டப்படும் அளவிற்கு உயர்ந்துள்ளார். ஸ்மித் மரபாந்த பேட்டிங் ஸ்டைலில் ஆடமாட்டார்; முற்றிலும் வித்தியாசமான பேட்டிங் ஸ்டைலை கொண்டவர். 

பேட்டிங் ஸ்டைல் வேறுபட்டாலும், இருவருமே, ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல. விராட் கோலி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 விதமான போட்டிகளிலும் தொடர்ச்சியாக சதங்களையும் சாதனைகளையும் குவித்து பெரியளவில் ஸ்கோர் செய்துவருகிறார். ஸ்மித், வெள்ளைபந்து கிரிக்கெட்டில் விராட் கோலியை விட பின் தங்கியிருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துகிறார்.

இப்படியாக இருவருமே மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களாக திகழும் நிலையில், பெரும்பாலான கிரிக்கெட் வீரர்களின் நேர்காணலில் முன்வைக்கப்படும் பொதுவான கேள்வி, கோலி - ஸ்மித் இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்பதுதான். 

ஆங்கில ஸ்போர்ட்ஸ் இணையதளம் ஒன்றுக்கு ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் ஷான் டைட் அளித்த பேட்டியில், அவரிடமும் கோலி மற்றும் ஸ்மித் ஆகிய இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு விராட் கோலி தான் என்று அவர் திடமாக பதிலளித்தார்.

அந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய ஷான் டைட், அனைத்துவிதமான போட்டிகளிலும் தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவதன் அடிப்படையில், விராட் கோலி தான் டாப். அனைத்து விதமான போட்டிகளிலும் அவர் சிறந்த வீரர். இந்திய அணிக்காக ஒரு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் பொறுப்புகளை தனது தோள்களில் சுமக்கிறார். கோலி மற்றும் ஸ்மித் ஆகிய இருவருமே சிறந்த வீரர்கள் தான் என்றாலும், கோலி தான் டாப் என்று ஷான் டைட் தெரிவித்துள்ளார்.

fஃபாஸ்ட் பவுலரான ஷான் டைட் 2005ம் ஆண்டிலிருந்து 2016ம் ஆண்டுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 3 டெஸ்ட் மற்றும் 35 ஒருநாள்  போட்டிகளில் ஆடியுள்ளார்.