இந்திய அணியின் சிக்கலாக இருந்துவந்த நான்காம் வரிசைக்கு உலக கோப்பைக்கு முன் தீர்வு காணும் விதமாக பல வீரர்கள் அந்த வரிசையில் பரிசோதிக்கப்பட்டனர்.  ரஹானே, ரெய்னா, மனீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ராயுடு என பலர் அந்த வரிசையில் பரிசோதிக்கப்பட்டு, இறுதியில் ராயுடு உறுதி செய்யப்பட்டார். 

ஆனால் உலக கோப்பை அணியில் அவர் கழட்டிவிடப்பட்டு விஜய் சங்கர் எடுக்கப்பட்டார். உலக கோப்பையிலும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்னை எதிரொலித்தது. இந்திய அணி உலக கோப்பை அரையிறுதியில் தோற்று வெளியேறியது. 

இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கலுக்கு தீர்வு காணும் விதமாக ஷ்ரேயாஸ் ஐயர், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீண்டும் அணியில் இடம்பிடித்தார். இந்திய அணியின் நான்காம் வரிசை சிக்கலுக்கு தீர்வு காணும் விதமாக ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் எடுக்கப்பட்டுள்ளார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளிலுமே ஷ்ரேயாஸ் ஐயர் ஐந்தாம் வரிசையில் தான் இறங்கினார்.

இரண்டு போட்டிகளிலுமே 2 வித்தியாசமான சூழல்களில் ஆடி அசத்தினார். ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்ன செய்ய வேண்டுமோ, அதை இரண்டு போட்டியிலும் செய்தார். இரண்டாவது போட்டியில் பார்ட்னர்ஷிப் அமைத்து சிங்கிள் ரொடேட் செய்து ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர், கடைசி போட்டியில் தாறுமாறாக அடித்து ஆடினார். இதன்மூலம் தன்னால் எந்த சூழலிலும் அதற்கேற்ப ஆடி அணியை காப்பாற்ற முடியும் என நிரூபித்து காட்டினார்.

ஆனால் நான்காம் வரிசை குறித்து, வெஸ்ட் இண்டீஸ் போட்டியின்போது பேசிய கேப்டன் கோலி, நான்காம் வரிசையில் ரிஷப் பண்ட் தான் முதல் தேர்வு என்று கூறினார். ஆனால் 4 மற்றும் 5ம் வரிசையை பொறுத்தமட்டில் இன்னாருக்குத்தான் என்று உறுதிப்படுத்தப்படவில்லை. சூழலுக்கு ஏற்றவாறு அந்த இரண்டு வரிசை பேட்ஸ்மேன்களும் மாறி மாறி இறக்கப்படுவார்கள் என கோலி தெரிவித்தார்.

ஆனால் ரிஷப் பண்ட் இரண்டு போட்டிகளிலுமே 4ம் வரிசையில் இறங்கி சொதப்பினார். ஷ்ரேயாஸ் ஐயர், இரண்டு போட்டிகளிலுமே அசத்தினார். கவாஸ்கர், ஜாகீர் கான் ஆகியோர் ஷ்ரேயாஸ் ஐயரை நான்காம் வரிசையில் இறக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்நிலையில், நான்காம் வரிசை குறித்து பேசிய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கோலி சொன்னது சரிதான். ஆனாலும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்னையாக இருக்கும் 4ம் வரிசை சிக்கலுக்கு தீர்வு அவசியம். ஷ்ரேயாஸ் ஐயர் தான் நான்காம் வரிசைக்கான பிரதான தேர்வு. ஷ்ரேயாஸ் ஐயர் சிறந்த திறமைசாலி என்று சாஸ்திரி புகழ்ந்தார். 

4 மற்றும் 5ம் வரிசை வீரர்கள் சுழற்சி முறையில் சூழலுக்கு ஏற்ப இறக்கப்படுவார்கள் என கோலி தெரிவித்திருந்த நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் தான் நான்காம் வரிசை வீரர் என சாஸ்திரி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.