ஐபிஎல் 12வது சீசனின் இறுதி போட்டியில் சிஎஸ்கேவை கடைசி பந்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்று நான்காவது முறையாக கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 149 ரன்கள் அடித்தது. 150 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய சிஎஸ்கே அணியின் விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் கடந்து வெற்றியை நோக்கி சிஎஸ்கேவை அழைத்து சென்ற வாட்சன், கடைசி ஓவரின் நான்காவது பந்தில் 80 ரன்களில் ஆட்டமிழந்தார். 

ஐந்தாவது பந்தில் தாகூர் இரண்டு ரன்கள் அடிக்க, கடைசி பந்தில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தை சாமர்த்தியமாக வீசி, தாகூரின் விக்கெட்டை வீழ்த்தி ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணியை வெற்றி பெற செய்தார் மலிங்கா. 

கடைசி பந்தை எதிர்கொண்டு அவுட்டான தாகூர், அப்போதைய மனநிலை மற்றும் திட்டம் குறித்து மனம் திறந்துள்ளார். கடைசி பந்தை அடித்துவிடலாம் என்றே நினைத்தேன். ஹைதராபாத் மைதானம் பெரியது. அதனால் நன்கு டீப்பாக அடித்துவிட்டால் 2 ரன்கள் ஓடலாம் என்று நினைத்தேன். ஐந்தாவது பந்தில் அது சரியாக நடந்தது. 

கடைசி பந்தையும் அடித்துவிட்டு 2 ரன்கள் ஓட நினைத்தேன். குறைந்தபட்சம் பந்து பேட்டில் பட்டால் ஒரு ரன் உறுதி. எனவே அடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் இருந்தேன். ஆனால் அவுட்டாகிவிட்டேன். என்னால் பெரிய ஷாட்டுகளை ஆடமுடியும். எனவே சிங்கிள் தட்ட முயற்சிக்காமல் பெரிய ஷாட் ஆடியிருக்கலாம் என்று பின்னர் தோன்றியது. கிரிக்கெட்டில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். அணிக்காக நான் வின்னிங் ரன் அடிக்கும் காலம் விரைவில் வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.