வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என வென்ற நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் நாளை(15) தொடங்குகிறது.

15, 18, 22 ஆகிய தேதிகளில் முறையே சென்னை, விசாகப்பட்டினம் மற்றும் கட்டாக் ஆகிய இடங்களில் மூன்று ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன. நாளை சென்னையில் முதல் ஒருநாள் போட்டி நடக்கவுள்ள நிலையில், புவனேஷ்வர் குமார் காயத்தால் ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். 

ஷிகர் தவான், சையத் முஷ்டாக் அலி தொடரில் காயமடைந்ததால், வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து முழுவதுமாக விலகினார். அவருக்கு பதிலாக டி20 அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், ஒருநாள் தொடரில் மயன்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், வலதுபுற இடுப்புப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியின் சீனியர் பவுலர் புவனேஷ்வர் குமார் ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரில் ஆடாமல் இருந்த புவனேஷ்வர் குமார், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் ஆடினார். இந்நிலையில், மீண்டும் காயமடைந்து ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். 

புவனேஷ்வர் குமாருக்கு மாற்று வீரராக ஷர்துல் தாகூர் அறிவிக்கப்பட்டுள்ளார். 

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, ஷிவம் துபே, கேதர் ஜாதவ், ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், தீபக் சாஹர், ஷமி, ஷர்துல் தாகூர்.