சிஎஸ்கேவின் வெற்றிக்காக ரத்தம் சொட்ட சொட்ட போராடிய வாட்சன்!! போட்டிக்கு பின் 6 தையல்.. ஹர்பஜன் சிங் நெகிழ்ச்சி
தோனி வாட்சன் மீது வைத்திருந்த நம்பிக்கை வீண்போகவில்லை. இந்த சீசன் முழுவதும் சரியாக ஆடாத வாட்சன், டெல்லிக்கு எதிரான தகுதிச்சுற்று போட்டியில் சிறப்பாக ஆடினார். அதன்பின்னர் இறுதி போட்டியிலும் அபாரமாக ஆடி கடைசி வரை போராடினார். அவர் ரன் அவுட் மட்டும் ஆகவில்லை என்றால் சிஎஸ்கே வென்றிருக்கும்.
ஐபிஎல்லில் நான்காவது முறையாக மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் இறுதி போட்டியில் மோதின. சிஎஸ்கேவை ஒரு ரன் வித்தியாசத்தில் கடைசி பந்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி பெற்று நான்காவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயித்த 150 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணியின் விக்கெட்டுகள் ஒருபுறம் சரிய, மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஷேன் வாட்சன் அரைசதம் அடித்து கடைசி வரை போராடினார். ஆனால் கடைசி ஓவரின் நான்காவது பந்தில் ரன் அவுட்டாக ஆட்டம் மும்பை பக்கம் திரும்பியது. மும்பை அணி வெற்றியும் பெற்றது.
ஷேன் வாட்சன் இந்த சீசன் முழுவதுமே முழு உடற்தகுதியுடன் இல்லை. அவரால் சரியாக ஓடி ஃபீல்டிங் செய்ய முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் பேட்டிங்கின்போது ரன் கூட வேகமாக ஓட முடியவில்லை. எனினும் அவரது அனுபவம் சிஎஸ்கே அணிக்கு தேவை என்பதாலும் அவர் முக்கியமான போட்டிகளில் சிறப்பாக ஆடி வெற்றி தேடிக்கொடுப்பவர் என்பதாலும் அவருக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
அவர் பேட்டிங் சரியாக ஆடாதபோதிலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தார் கேப்டன் தோனி. அதை வாட்சனே வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். இதே வேறு எந்த அணியாக இருந்தாலும் என்னை தூக்கியிருப்பார்கள். ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுத்திருக்க மாட்டார்கள் என்று தெரிவித்திருந்தார்.
தோனி வாட்சன் மீது வைத்திருந்த நம்பிக்கை வீண்போகவில்லை. இந்த சீசன் முழுவதும் சரியாக ஆடாத வாட்சன், டெல்லிக்கு எதிரான தகுதிச்சுற்று போட்டியில் சிறப்பாக ஆடினார். அதன்பின்னர் இறுதி போட்டியிலும் அபாரமாக ஆடி கடைசி வரை போராடினார். அவர் ரன் அவுட் மட்டும் ஆகவில்லை என்றால் சிஎஸ்கே வென்றிருக்கும்.
வாட்சனால் ஓடமுடியவில்லை என்பது போட்டியிலேயே தெரிந்தது. ஆனால் அவர் முழங்காலில் ஏற்பட்ட காயத்துடன் வலியை பொறுத்துக்கொண்டு ஆடியிருப்பது தெரியவந்துள்ளது. வாட்சன் பேட்டிங் ஆடும்போது அவரது பேண்ட்டில் முழங்கால் பகுதியில் ரத்தக்கறை இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகிவருகிறது.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஹர்பஜன் சிங், வாட்சன் டைவ் அடிக்கும்போது அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதை யாரிடமும் கூறாமல் மறைத்து வலியுடன் ஆடியுள்ளார். போட்டிக்கு பின்னர் காயமடைந்த இடத்தில் 6 தையல்கள் போடப்பட்டது என்று ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் வைரலாகிவருவதால், ரசிகர்கள் வாட்சனின் அர்ப்பணிப்பை சமூக வலைதளங்களில் தாறுமாறாக பாராட்டுகின்றனர்.