ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரே அத்துமீறி களத்திற்குள் சென்றது தவறுதான் என்று அந்த அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் நடந்துகொண்ட விதம் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 222 ரன்கள் அடிக்க, 223 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய டெல்லி கேபிடள்ஸ் அணி 20 ஓவரில் 207 ரன்கள் அடித்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியின் கடைசி 2 ஓவர்களில் டெல்லி அணியின் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19வது ஓவரை வீசிய பிரசித் கிருஷ்ணா அந்த ஓவரில் ரன்னே விட்டுக்கொடுக்காமல் அருமையாக வீசினார். அதனால் கடைசி ஓவரில் டெல்லி அணி 6 சிக்ஸர்கள் அடிக்க வேண்டிய கட்டாயம் உருவானது. முதல் 3 பந்திலும் 3 சிக்ஸர்களை விளாசி நம்பிக்கையளித்தார் டெல்லி வீரர் ரோவ்மன் பவல். அதில் 3வது பந்து இடுப்பு உயரத்துக்கு மேல் வந்தது. அதனால் அது கண்டிப்பாக நோ பால் தான். ஆனால் கள நடுவர் அதற்கு நோ பால் கொடுக்காததால், உணர்ச்சிவசப்பட்ட டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட், களத்தில் இருந்த பவல் மற்றும் குல்தீப் யாதவை களத்தை விட்டு வெளியேறுமாறு அழைத்தார்.
ரிஷப் பண்ட்டுடன் இணைந்து ஷர்துல் தாகூரும் அவர்களை அழைத்தார். டெல்லி அணி உதவி பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரே களத்திற்குள் நுழைந்து அம்பயர்களுடன் வாக்குவாதம் செய்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்ப, ரிஷப் பண்ட்டின் செயல் கடும் விமர்சனத்துக்குள்ளானது. ரிஷப் பண்ட்டுக்கும் பிரவீன் ஆம்ரேவுக்கும் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக போட்டி ஊதியம் முழுவதும் அபராதமாக விதிக்கப்பட்டது. ஷர்துல் தாகூருக்கு போட்டி ஊதியத்தில் 50 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. பிரவீன் ஆம்ரேவுக்கு ஒரு போட்டியில் தடையும் விதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து பேசிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் பயிற்சியாளர் ஷேன் வாட்சன், கடைசி ஓவரில் நடந்த சம்பவம் மிகவும் ஏமாற்றமளித்தது. அம்பயர்களின் முடிவு சரியோ தவறோ அதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதைவிடுத்து களத்திற்குள் நுழைந்து அம்பயர்களுடன் வாக்குவாதம் எல்லாம் செய்யக்கூடாது. அதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அம்பயர்களின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். இளம் வீரர்களுக்கு நான் சொல்வதெல்லாம், அம்பயர்களின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் என்று ஷேன் வாட்சன் ஷேன் வாட்சன் ஷேன் வாட்சன் தெரிவித்தார்.
