கிரிக்கெட்டின் மிகவும் பாரம்பரியமான டெஸ்ட் தொடர் ஆஷஸ் தொடர். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான இந்த தொடர் கிரிக்கெட்டின் மிகவும் பழமையான பாரம்பரியமான மற்றும் முக்கியமான தொடர். 

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளால் உலக கோப்பைக்கு நிகராக மதிக்கப்படும் தொடர் ஆஷஸ். வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் தொடங்குகிறது. ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடருக்காக அந்த அணிகள் தீவிரமாக தயாராகிவருகின்றன. 

இங்கிலாந்து அணி, முதன்முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்று உற்சாகத்துடன் இருக்கும் நிலையில், இந்தமுறை ஆஷஸ் இங்கிலாந்தில் நடப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. 

ஆஷஸ் தொடர் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே, முதல் போட்டிக்கான இரு அணிகளையும் தேர்வு செய்து அறிவித்துள்ளார். 

ஷேன் வார்னே தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி:

வார்னர், மார்கஸ் ஹாரிஸ், கவாஜா, ஸ்மித், டிராவிஸ் ஹெட், மேத்யூ வேட், டிம் பெய்ன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), பாட்டின்சன், பாட் கம்மின்ஸ், நாதன் லயன், ஸ்டார்க்/ஹேசில்வுட்.

பென்ச்:  அலெக்ஸ் கேரி, ரிச்சர்ட்ஸன், பான்க்ராஃப்ட், மிட்செல் மார்ஷ், புகோவ்ஸ்கி.

கேப்டன் டிம் பெய்னே ஒரு விக்கெட் கீப்பர் தான். ஆனாலும் மற்றொரு விக்கெட் கீப்பரான மேத்யூ வேடையும் ஆடும் லெவனிற்கு தேர்வு செய்துள்ள ஷேன் வார்னே, பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப்பை அணியில் சேர்க்கவில்லை. ஸ்மித் தடையில் இருந்த நேரத்தில், இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஹேண்ட்ஸ்கம்ப் ஆடினார். ஆனால் அவரை வார்னே சேர்க்கவில்லை. 

வார்னே தேர்வு செய்த இங்கிலாந்து அணி:

ராய், க்ராவ்லி, பேர்ஸ்டோ, ஜோ ரூட்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், பட்லர், ஃபோக்ஸ்(விக்கெட் கீப்பர்), மொயின் அலி, ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் உட்.

இவர்களில் ராய், க்ராவ்லி மற்றும் ஆர்ச்சர் ஆகிய மூவரும் இதுவரை சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடியதில்லை. இவர்கள் மூவருமே அறிமுக வீரர்கள் தான். மேலும் இங்கிலாந்து அணியில் ஏற்கனவே பட்லர் மற்றும் பேர்ஸ்டோ என ஒன்றுக்கு இரண்டு விக்கெட் கீப்பர்கள் இருக்கும் நிலையில், ஃபோக்ஸை விக்கெட் கீப்பராக தேர்வு செய்துள்ளார் வார்னே.