ஷேன் வார்னை தன்னிடம் ஸ்டீவ் வாக் விமர்சித்த சம்பவத்தை ஷேன் லீ பகிர்ந்துள்ளார். 

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக்கிற்கும், லெஜண்ட் ஸ்பின்னர்  ஷேன் வார்னுக்கும் இடையேயான மோதல் கிரிக்கெட் ரசிகர்கள் அறிந்த விஷயமே. ஸ்டீவ் வாக்கை சுயநல கிரிக்கெட்டர் என்று தொடர்ந்து விமர்சித்துவருகிறார் ஷேன் வார்ன். ஸ்டீவ் வாக்கிற்கு அணி வெற்றி பெற வேண்டும் என்பதெல்லாம் நோக்கம் கிடையாது. அவர் அரைசதம் அடிக்க வேண்டும் என்பது மட்டுமே அவரது பிரச்னை. அணியை பற்றி கவலைப்படமாட்டார் என்று ஸ்டீவ் வாக்கை ஷேன் வார்ன் விமர்சித்துவருகிறார். ஸ்டீவ் வாக்கும் ஷேன் வார்னிற்கு பதிலடி கொடுப்பது என இருவருக்கும் இடையேயான மோதல் பல்லாண்டுகள் கழித்தும் இன்றும் தொடர்ந்துவருகிறது. 

1999 வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் முதல் சில டெஸ்ட் போட்டிகளில் காயம் காரணமாக சரியாக ஆடமுடியாத ஷேன் வார்னை, கடைசி போட்டியில் வலுக்கட்டாயமாக நீக்கினார் ஸ்டீவ் வாக். இந்த சம்பவம் தான், அவர்களுக்கு இடையேயான விரிசலுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கும் முன்பிருந்தே, ஷேன் வார்ன் - ஸ்டீவ் வாக் இடையே பனிப்போர் நடந்திருக்கிறது என்பதை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் லீ தெரிவித்துள்ளார். 

1995 இறுதியில் அறிமுகமான ஷேன் லீ, அடுத்த சில மாதங்களில் உலக கோப்பைக்கான அணியில் இடம்பெற்று 1996 உலக கோப்பையில் ஆடினார். இந்த ஷேன் லீ, பிரெட் லீயின் அண்ணன். இந்நிலையில், 1996 உலக கோப்பையில் ஷேன் வார்னை பற்றி ஸ்டீவ் வாக் சொன்ன விஷயத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார் ஷேன் லீ. 

இதுகுறித்து பேசிய ஷேன் லீ, என்னை அழைத்த ஷேன் வார்ன், இது ஷேன் ஷோ என்றார். நான் ஷேன் லீ; அவர் ஷேன் வார்ன். எனவே என்னிடம் வந்து இது ஷேன் ஷோ என்றார். ஷேன் வார்னிடம் பேசிய என்னை அழைத்தார் ஸ்டீவ் வாக். அவரிடம்(வார்ன்) ஏன் பேசுகிறாய் என்று என்னிடம் ஸ்டீவ் வாக் கேட்டார். அவர் என்னிடம் நன்றாக பழகுகிறாரே என்றேன். அதற்கு அவர்(வாக்) என்னிடம், நீ பள்ளியில் படிக்கும்போது, யாருடனும் நன்றாக பழகாமல் ஒரு பையன் மட்டும் தனியார் இருப்பான் தெரியுமா? அதுதான் ஷேன் வார்ன். அவருக்கென்று நண்பர்களே கிடையாது என்று தன்னிடம் வார்னை பற்றி வாக் கூறியதாக ஷேன் லீ தெரிவித்துள்ளார். 

ஸ்டீவ் வாக் - ஷேன் வார்ன் இடையேயான மோதல் நீடித்துவரும் நிலையில், ஷேன் லீ பேசியிருப்பது, எரியும் விளக்கில் எண்ணெயை ஊற்றும் செயலாக அமைந்துள்ளது.