இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவருகிறது பாகிஸ்தான் அணி. 

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அபித் அலி 16 ரன்களிலும் கேப்டன் அசார் அலி ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் தொடக்க வீரர் ஷான் மசூத்துடன் ஜோடி சேர்ந்த பாபர் அசாம், அதிரடியாக ஆடி அரைசதமடித்தார். முதல் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் 100 பந்தில் 69 ரன்கள் அடித்திருந்த பாபர் அசாம், இரண்டாம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்தில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ஆசாத் ஷாஃபிக் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, பாகிஸ்தான் அணி 176 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான் அணி. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் களத்தில் நங்கூரமிட்டு நிலைத்து நின்று ஆடிவரும் தொடக்க வீரர் ஷான் மசூத் சதமடித்தார். 6வது விக்கெட்டுக்கு ஷான் மசூத்துடன் ஜோடி சேர்ந்த ஷதாப் கான், மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். களத்தில் நன்றாக செட்டில் ஆகியிருந்த ஷான் மசூத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய ஷதாப் கான் 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஷான் மசூத் இந்த போட்டியில் அடித்த சதத்தின் மூலம் அபாரமான சாதனைகளை படைத்துள்ளார். ஷான் மசூத்திற்கு இது ஹாட்ரிக் சதம். டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து 3 சதங்களை அடித்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முந்தைய, அவர் ஆடிய 2 டெஸ்ட் இன்னிங்ஸ்களிலும் சதமடித்திருந்த ஷான் மசூத், இந்த இன்னிங்ஸிலும் சதமடித்தார். 

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் சதமடித்த ஆறாவது பாகிஸ்தான் வீரர் ஷான் மசூத். இவருக்கு முன், ஜாகீர் அப்பாஸ், முதாசர் நாசர், முகமது யூசுஃப், யூனிஸ் கான், மிஸ்பா உல் ஹக் ஆகிய ஐந்து வீரர்களும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் சதமடித்த பாகிஸ்தான் வீரர்கள். இந்த பட்டியலில் இப்போது ஷான் மசூத்தும் இணைந்துள்ளார். அதுமட்டுமல்லாது, முதாசர் நாசருக்கு அடுத்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் சதமடித்த இரண்டாவது தொடக்க வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார் ஷான் மசூத். 1983ல் முதாசர் நாசர் தொடர்ந்து 3 சதமடித்தார். அதன்பின்னர் 37 ஆண்டுக்கு பிறகு அந்த சாதனையை படைத்த பாகிஸ்தான் தொடக்க வீரர் என்ற சாதனையை மசூத் படைத்துள்ளார். 

அதேபோல, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடிக்கும் ஐந்தாவது பாகிஸ்தான் தொடக்க வீரர் ஷான் மசூத். இதற்கு முன் மோசின் கான், முதாசர் நாசர், அமீர் சொஹைல் மற்றும் சயீத் அன்வர் ஆகிய வெறும் 4 பாகிஸ்தான் தோடக்க வீரர்கள் மட்டுமே இங்கிலாந்தில் சதமடித்துள்ளனர்.