வங்கதேச கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான ஷகிப் அல் ஹசன், தான் இணைந்து ஆடியதில் சிறந்த 11 வீரர்களை கொண்ட ஐபிஎல் லெவனை தேர்வு செய்துள்ளார். 

ஷகிப் அல் ஹசன் வங்கதேச கிரிக்கெட் அணியின் சீனியர் நட்சத்திர வீரர். வங்கதேச அணியின் முன்னாள் கேப்டனான ஷகிப் அல் ஹசன், தன்னை சூதாட்டத்தரகர் அணுகியது குறித்த தகவலை தெரியப்படுத்தாதற்காக தடையில் இருக்கிறார். 

இந்நிலையில், கிரிக்பஸ் ஸ்போர்ட்ஸ் இணையதளத்தில் பேசிய ஷகிப் அல் ஹசன், தான் இணைந்து ஆடியதில் சிறந்த வீரர்களை கொண்ட ஐபிஎல் லெவனை தேர்வு செய்துள்ளார். ஐபிஎல்லில் 2011லிருந்து 2017 வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆடிய ஷகிப் அல் ஹசன், 2018-19 சீசன்களில் சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடினா.ர். 

இந்நிலையில், தான் இணைந்து ஆடியதில் சிறந்த வீரர்களை கொண்டு அவர் உருவாக்கிய ஐபிஎல் லெவனின் தொடக்க வீரர்களாக ராபின் உத்தப்பா மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். மூன்றாம் வரிசை வீரராக, ஐபிஎல்லில் தனது முன்னாள் கேப்டன் கம்பீரை தேர்வு செய்துள்ள ஷகிப் அல் ஹசன், அவரையே இந்த அணிக்கு கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார்.

கம்பீரின் கேப்டன்சியில் 2012 மற்றும் 2014 ஆகிய இரண்டு சீசன்களிலும் கேகேஆர் அணி ஐபிஎல் டைட்டிலை வென்றது. அப்போது அந்த கேகேஆர் அணியில் ஷகிப் அல் ஹசனும் இடம்பெற்றிருந்தார். கேகேஆர் அணிக்கு 2 முறை கோப்பையை வென்றுகொடுத்த வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான கம்பீரையே அணிக்கு கேப்டனாக நியமித்துள்ளார். 

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக மனீஷ் பாண்டே, யூசுஃப் பதான் ஆகியோருடன் தனது பெயரையும் சேர்த்துள்ளார் ஷகிப். யூசுஃப் பதான் மற்றும் ஷகிப் ஆகிய இருவருமே பவுலிங்கும் வீசக்கூடிய ஆல்ரவுண்டர். ஃபினிஷராக அதிரடி ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரசலையும் ஸ்பின் பவுலராக சுனில் நரைனையும் தேர்வு செய்துள்ளார். சுனில் நரைனும் அருமையாக பேட்டிங் ஆடக்கூடியவர். ஃபாஸ்ட் பவுலர்களாக சன்ரைசர்ஸ் அணியில் தன்னுடன் இணைந்து ஆடிய புவனேஷ்வர் குமாரையும், கேகேஆர் அணியில் தன்னுடன் இணைந்து ஆடிய லக்‌ஷ்மிபதி பாலாஜி மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். 

ஷகிப் அல் ஹசன் தேர்வு செய்த சிறந்த ஐபிஎல் லெவன்:

ராபின் உத்தப்பா, டேவிட் வார்னர், கவுதம் கம்பீர்(கேப்டன்), மனீஷ் பாண்டே, ஷகிப் அல் ஹசன், யூசுஃப் பதான், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், புவனேஷ்வர் குமார், லக்‌ஷ்மிபதி பாலாஜி, உமேஷ் யாதவ்.