கிரிக்கெட் வீரர்கள் அணியும் ஹெல்மெட், காலமாற்றத்திற்கு ஏற்பவும், கிரிக்கெட்டின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்பவும் தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டே வந்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் க்ரில் இல்லாத ஹெல்மெட் பயன்படுத்தப்பட்டது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுத்தப்பட்டது.

ஆஸ்திரேலிய வீரர் ஃபில் ஹியூக்ஸ் பந்து அடித்து களத்திலேயே உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு, ஹெல்மெட்டின் வடிவமைப்புகளும் தரமும் கடும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும் அதிரடி பேட்ஸ்மேனும் ஆல்ரவுண்டருமான அஃப்ரிடி, பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் தகுதிச்சுற்று போட்டியில் வித்தியாசமான ஹெல்மெட்டை அணிந்து ஆடினார்.

பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் லீக் போட்டிகள் முடிந்த நிலையில், கொரோனாவால் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. அதனால் தகுதிச்சுற்று மற்றும் இறுதி போட்டிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் தகுதிச்சுற்று போட்டியும் எலிமினேட்டர் போட்டியும் நடந்தன.

இதில் முதல் தகுதிச்சுற்று போட்டியில் கராச்சி கிங்ஸும் முல்தான் சுல்தான்ஸும் மோதின. போட்டி டை ஆன நிலையில், சூப்பர் ஓவரில் கராச்சி கிங்ஸ் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில், முல்தான் சுல்தான்ஸ் அணியில் ஆடிய அஃப்ரிடி, கிரில்லில் பெரிய இடைவெளி விட்டு கண் மற்றும் வாய் பகுதியில் ஓபனாக இருக்கும்படியான ஹெல்மெட்டை அணிந்து ஆடினார்.

பாதுகாப்பில்லாத அந்த ஹெல்மெட்டை பார்த்த வர்ணனையாளர்கள், இதேமாதிரியான ஹெல்மெட்டை ஏற்கனவே ஜாண்டி ரோட்ஸ் அணிந்து ஆடியிருந்ததை நினைவுகூர்ந்தனர். பவுலரின் ஆக்‌ஷனையும் பந்தையும் துல்லியமாக பார்ப்பதற்காக இதே மாதிரியான ஹெல்மெட்டை ஜாண்டி ரோட்ஸ் அவர் ஆடிய காலத்தில் அணிந்து ஆடியிருக்கிறார். ஆனால் இதுமாதிரியான பாதுகாப்பற்ற ஹெல்மெட்டை அணிந்து ஆடுவது நல்லதல்ல. அதுவும் இப்போதுள்ள ஃபாஸ்ட் பவுலர்கள் வீசும் வேகத்திற்கும், பவுன்ஸருக்கும் இதுமாதிரி ரிஸ்க் எடுப்பது சரியல்ல.