ஷாகித் அஃப்ரிடிக்கு 1999 உலக கோப்பையின் போதெல்லாம், பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுமே சரியாக வராது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஆமீர் சொஹைல் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அதிரடி வீரர் அஃப்ரிடி, ஒரு மிகச்சிறந்த ஆல்ரவுண்டர். அதிரடிக்கு பெயர்போனவர். இவரது அதிரடி பேட்டிங்கால், பூம் பூம் அஃப்ரிடி என்று அழைக்கப்படுகிறார். 

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்(476 சிக்ஸர்கள்) விளாசிய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த அஃப்ரிடியின் சாதனை 18 ஆண்டுகளுக்கு பிறகே முறியடிக்கப்பட்டது. 1996ம் ஆண்டிலிருந்து 2018ம் ஆண்டுவரை பாகிஸ்தான் அணியில் சர்வதேச போட்டிகளில் ஆடினார். 2015ம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் ஆடவில்லை. 2018ம் ஆண்டுவரை டி20 போட்டிகளில் ஆடினார். நீண்டநெடிய அனுபவம் கொண்டவர் அஃப்ரிடி. 

ஆனால் சவாலான கண்டிஷன்களில் அவருக்கு பேட்டிங், பவுலிங் இரண்டுமே சரியாக வராது என்று முன்னாள் கேப்டன் அமீர் சொஹைல் தெரிவித்துள்ளார். 

1999 உலக கோப்பை மற்றும் அஃப்ரிடி குறித்து யூடியூபில் பேசியுள்ள அமீர் சொஹைல், 1998ல் நான் கேப்டனாக இருந்தபோதே, 1999 உலக கோப்பை அணிக்கான தொடக்க வீரர் குறித்து ஆலோசித்தோம். புதிய பந்தில் சிறப்பாகவும் களத்தில் நிலைத்து நின்று ஆடக்கூடிய தொடக்க வீரராக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் கடைசி நேரத்தில் திடீரென ஷாகித் அஃப்ரிடியை தொடக்க வீரராக்கினார்கள்.

ஃப்ளாட்டான, பெரியளவில் பவுன்ஸ் ஆகாத பிட்ச்களில் அஃப்ரிடி அதிரடியாக ஆடி எதிரணிகளுக்கு நெருக்கடி கொடுப்பார். ஆனால் சவாலான கண்டிஷன்களில் அஃப்ரிடி சரியாக ஆடமாட்டார். சவாலான கண்டிஷன்களில் பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே மோசமாக செயல்படுவார். 1999 உலக கோப்பையில், வாசிம் அக்ரமுக்கு பதில் நான் கேப்டனாக இருந்திருந்தால், முகமது யூசுஃபைத்தான் தொடக்க வீரராக இறக்கியிருப்பேன் என்று அமீர் சொஹைல் தெரிவித்தார். 

அஃப்ரிடி 1999 உலக கோப்பையில் படுமோசமாக ஆடினார். தொடக்க வீரராக இறங்கிய அவர், 1999 உலக கோப்பையில் 7 இன்னிங்ஸில் வெறும் 93 ரன்கள் மட்டுமே அடித்தார். அவரது சராசரி வெறும் 13.28 ஆகும். 
 
அந்த உலக கோப்பையின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்து உலக கோப்பையை இழந்தது பாகிஸ்தான் அணி.