டி20 உலக கோப்பை: பாகிஸ்தான் ஜெயிக்கணும்னா நீ இதை செய்தே தீரணும்! கேப்டன் பாபர் அசாமுக்கு அஃப்ரிடி எச்சரிக்கை
டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு எதிர்பாராத விதமாக அதிர்ஷ்டவசமாக பாகிஸ்தான் அணி முன்னேறிவிட்ட நிலையில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுக்கு முக்கியமான எச்சரிக்கை விடுத்துள்ளார் ஷாஹித் அஃப்ரிடி.
டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் முன்னேறியுள்ளன. க்ரூப் 2ல் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் தான் அரையிறுதிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தென்னாப்பிரிக்க அணி யாருமே எதிர்பார்த்திராத வகையில் நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
இதையடுத்து வங்கதேசத்தை வீழ்த்திய பாகிஸ்தான் அணி 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியது. தென்னாப்பிரிக்க அணி 5 புள்ளிகளுடன் தொடரை விட்டு வெளியேறியது. இந்தியா மற்றும் ஜிம்பாப்வேவிடம் தோற்ற பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அதிர்ஷ்டவசமாக பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் மாபெரும் சாதனை..! இந்திய வீரர் யாருமே செய்யாத சாதனை
இந்த உலக கோப்பையில் பாகிஸ்தான் இதுவரை மிகச்சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தவில்லை. ஆனாலும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. வரும் 9ம் தேதி சிட்னியில் நடக்கும் அரையிறுதி போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான வலுவான நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது பாகிஸ்தான் அணி.
பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் பெரும் பிரச்னையாக இருந்துவந்த நிலையில், பாகிஸ்தான் அணி பெரிதும் நம்பியிருந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோரும் சோபிக்காததால் தான் பாகிஸ்தான் அணி சுமாராக ஆடியது. ஃபகர் ஜமானுக்கு மாற்று வீரராக அணிக்குள் வந்த முகமது ஹாரிஸ் அதிரடியாக பேட்டிங் ஆடி அணிக்கு வலுசேர்த்துள்ளார். ஷான் மசூத், ஷதாப் கான், இஃப்டிகார் அகமது, முகமது நவாஸ் ஆகியோரும் நன்றாக ஆடுவதால் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வலுப்பெற்றுள்ளது.
இந்நிலையில், அரையிறுதிக்கு முன்னேறியுள்ள பாகிஸ்தான் அணிக்கு, குறிப்பாக அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கு ஷாஹித் அஃப்ரிடி ஒரு அறிவுரை வழங்கியுள்ளார். அதை எச்சரிக்கையாக கூட எடுத்துக்கொள்ளலாம்.
இதுகுறித்து பாபர் அசாமை டேக் செய்து டுவீட் செய்துள்ள ஷாஹித் அஃப்ரிடி, டாப் ஆர்டரில் ஃபயர் பவர் வேண்டும். அதிரடியாக அடித்து ஆடக்கூடிய வீரர்கள் தான் டாப் ஆர்டரில் ஆடவேண்டும். அந்தவகையில் அதிரடியாக பேட்டிங் ஆடும் முகமது ஹாரிஸ், ஷதாப் கான் ஆகியோரை பேட்டிங் ஆர்டரில் மேலே இறக்கிவிட வேண்டும். ஹாரிஸை ரிஸ்வானுடன் தொடக்க வீரராக இறக்கிவிட்டு, ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப, எந்த பேட்டிங் ஆர்டரிலும் இறங்க பாபர் அசாம் தயாராக இருக்க வேண்டும் என்று ஷாஹித் அஃப்ரிடி அறிவுறுத்தியுள்ளார்.