பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் ஆல்ரவுண்டருமான ஷாகித் அஃப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் உலகம் முழுதும் காட்டுத்தீயாய் பரவி 4 லட்சத்து 27 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்களை காவு வாங்கியுள்ளது. சாமானியர்கள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை பாரபட்சமின்றி கொரோனா வைரஸ் தொற்றுகிறது. 

சர்வதேச கிரிக்கெட் வீரர்களை பொறுத்தமட்டில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டௌஃபிக் உமருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்தார். 

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த தகவலை அவரே டுவிட்டரில் தெரியப்படுத்தியுள்ளார். 

ஷாகித் அஃப்ரிடி பாகிஸ்தான் அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். அதிரடி பேட்டிங், அசத்தலான பவுலிங், சிறப்பான ஃபீல்டிங் என அனைத்து வகையிலும் அணிக்கு பங்களிப்பு செய்தவர். மிகச்சிறந்த ஆல்ரவுண்டரான அஃப்ரிடி, பாகிஸ்தான் அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். 

பாகிஸ்தான் அணிக்காக 398 சர்வதேச ஒருநாள் மற்றும் 99 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். 27 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சோபித்த அளவிற்கு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.