மகளிர் டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையில் இந்திய அணி மிகச்சிறப்பாக ஆடி லீக் சுற்றின் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. 

ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளும், பி பிரிவில் இருந்து தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தையும் தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்கிறது. 

இந்த டி20 உலக கோப்பையில் லீக் சுற்றில் இந்திய அணி பெற்ற அனைத்து வெற்றிகளுக்கும் முக்கியமான காரணம் இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வெர்மா. 16 வயதே ஆன ஷஃபாலி வெர்மா, அனைத்து போட்டிகளிலுமே தொடக்கம் முதலே அடித்து ஆடி இந்திய அணிக்கு அதிரடியான அடித்தளத்தை அமைத்து கொடுத்தார். இந்திய அணி ஆடிய அனைத்து போட்டிகளிலும், இந்திய அணிக்கும் எதிரணிக்கும் இடையேயான வித்தியாசமாக ஷஃபாலியின் பேட்டிங் தான் அமைந்தது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் லீக் போட்டியில் மட்டும்தான் பூனம் யாதவின் அபாரமான சுழல் பவுலிங் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அதைத்தவிர மற்ற 3 போட்டிகளிலும் ஷஃபாலியின் அதிரடியான தொடக்கம் தான் வெற்றிக்கு முக்கிய காரணம்.

தொடக்கம் முதலே, எந்தவித பயமோ பதற்றமோ இல்லாமல் அடித்து ஆடும் ஷஃபாலி வெர்மா, லாங் ஆஃப் மற்றும் கவர் திசையில் பந்துகளை பறக்கவிடுவதில் வல்லவராக திகழ்கிறார். நடப்பு டி20 உலக கோப்பையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் லீக் போட்டியில் 15 பந்தில் 29 ரன்களை விளாசிய ஷஃபாலி வெர்மா, வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 17 பந்தில் 39 ரன்களை விளாசி, அந்த போட்டியில் ஆட்டநாயகி விருதையும் வென்றார். 

Also Read - மார்க் பவுச்சர் விதித்த கெடு.. பீதியில் டிவில்லியர்ஸ்

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியில் 34 பந்தில் 46 ரன்கள் அடித்த ஷஃபாலி வெர்மா தான் அந்த போட்டியிலும் ஆட்டநாயகி விருதை வென்றார். இலங்கைக்கு எதிரான போட்டியிலும் 34 பந்தில் 47 ரன்கள் அடித்து இலங்கை நிர்ணயித்த இலக்கை எளிதாக எட்ட உதவினார். இந்த உலக கோப்பையில் அசத்தலாக ஆடிவரும் ஷஃபாலி வெர்மா, மகளிர் டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் 761 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். வெறும் பதினெட்டே சர்வதேச டி20 போட்டிகளில் ஆடியுள்ள ஷஃபாலி வெர்மா, அதற்குள்ளாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வீராங்கனைகளை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.