தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் சீனியர் வீரர்களான புஜாரா (3) மற்றும் ரஹானே (0) ஆகிய இருவரும் மறுபடியும் படுமோசமாக சொதப்பினர். 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு முதுகில் தசைப்பிடிப்பு காரணமாக ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஹனுமா விஹாரி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. கேஎல் ராகுல் மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் முதல் டெஸ்ட்டை போலவே நன்றாக தொடங்கினர். அதிரடியாக ஆடி வேகமாக ஸ்கோர் செய்த தொடக்க வீரர் மயன்க் அகர்வால் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ராகுலுடன் ஜோடி சேர்ந்த புஜாராவிற்கு சிறப்பாக ஆடவேண்டிய கட்டாயம் இருந்தது. புஜாரா, ரஹானே ஆகிய 2 சீனியர் வீரர்களும் கடந்த 2 ஆண்டுகளாக சரியாக விளையாடவில்லை. ஆனாலும் அவர்களின் கடந்த கால பங்களிப்பை மனதில் வைத்து, அதற்கு மதிப்பளிக்கும் விதமாக அவர்களுக்கு இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படுகிறது.

ஆனால் புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும், தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் மிக அதிகமானவை என்று தெரிந்தும் கூட தொடர்ந்து சொதப்புவதால், வாழ்வா சாவா என்ற நிலையில், கண்டிப்பாக பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ஆனால் இந்த போட்டியிலும் ஏமாற்றமளித்தனர். 

மயன்க் அகர்வால் ஆட்டமிழந்தபின்னர் களத்திற்கு வந்த புஜாரா, வெறும் 3 ரன்களுக்கு ஆலிவியரின் பந்தில் ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே ரஹானேவும் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். புஜாரா 3 ரன்னிலும், ரஹானே ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழந்து மீண்டுமொருமுறை ஏமாற்றமளித்தனர்.

இந்திய அணி 49 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், ராகுலுடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்துள்ளார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் ராகுல் நிலைத்து ஆடிவருகிறார். முதல் நாள் ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளை வரை இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் அடித்துள்ளது.