ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இறுதி போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே இன்று நடக்கிறது. 

நடப்பு சீசன் முடியவுள்ள நிலையில், அனில் கும்ப்ளே இந்த சீசனின் சிறந்த வீரர்களை கொண்ட கனவு அணியை தேர்வு செய்தார். இந்நிலையில், முன்னாள் அதிரடி வீரர் சேவாக் தனது கனவு அணியை தேர்வு செய்துள்ளார்.

சேவாக் தேர்வு செய்துள்ள அணியில் தோனி, கோலி, ரோஹித் சர்மா இவர்களில் யாருமே இல்லை. கோலியும் ரோஹித்தும் இந்த சீசனில் பெரிதாக ஆடவில்லை என்றாலும் தோனி சிறப்பாகவே ஆடினார். ஆனால் தோனியைக்கூட சேவாக் தேர்வு செய்யவில்லை. 

தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். இந்த சீசனில் தவானின் ஆட்டம் அபாரமாக இருந்துள்ளது. இளம் வீரர்களை கொண்ட டெல்லி அணியில் ஒரு சீனியர் வீரராக தவான் தனது கடமையை செவ்வனே செய்தார். அதேபோல் இந்த சீசனில் அறிமுகமான பேர்ஸ்டோ, சன்ரைசர்ஸ் அணிக்காக அபாரமாக ஆடினார்.

கேல் ராகுலை மூன்றாம் வரிசை வீரராகவும் யாருமே எதிர்பார்த்திராத வகையில் வார்னரை நான்காம் வரிசை வீரராகவும் தேர்வு செய்துள்ளார் சேவாக். வார்னர் ஓபனிங்கில் மட்டுமல்லாமல் மிடில் ஆர்டரிலும் சிறப்பாக ஆடக்கூடியவர் என்று சேவாக் தெரிவித்துள்ளார். 

இந்த சீசனில் கேம் சேஞ்சர்களாகவும் சிறந்த ஃபினிஷர்களாகவும் வலம்வந்த ஹர்திக் பாண்டியா மற்றும் ஆண்ட்ரே ரசல் ஆகிய இருவரையும் ஆல்ரவுண்டர்களாக எடுத்துள்ளார். ஸ்பின்னர்களாக ஷ்ரேயாஸ் கோபால், ராகுல் சாஹர் ஆகிய இருவரையும் ஃபாஸ்ட் பவுலர்களாக ரபாடா மற்றும் பும்ரா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். இந்த அணியில் விக்கெட் கீப்பராக பேர்ஸ்டோ இருக்கும்போதிலும் ரிஷப் பண்ட்டையும் எடுத்துள்ளார் சேவாக். இந்த சீசனில் ரிஷப்பும் சிறப்பாகவே ஆடினார்.

சேவாக் தேர்வு செய்துள்ள ஐபிஎல் 2019 கனவு அணி:

ஜானி பேர்ஸ்டோ, தவான், கேஎல் ராகுல், வார்னர்(கேப்டன்), ரிஷப் பண்ட், ஆண்ட்ரே ரசல், ஹர்திக் பாண்டியா, ஷ்ரேயாஸ் கோபால், ராகுல் சாஹர், ரபாடா, பும்ரா.