சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்கள் கலந்துகொண்டு ஆடும் டி20 தொடர் இந்தியாவில் நடத்தப்படுகிறது. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளின் முன்னாள் வீரர்கள் கலந்துகொண்டு இந்த தொடரில் ஆடுகின்றனர்.

இன்றைய போட்டியில் இந்தியா லெஜண்ட்ஸ் மற்றும் வங்கதேச லெஜண்ட்ஸ் அணிகள் மோதின. ராய்ப்பூரில் நடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் நஜிமுதீன் மட்டுமே அதிரடியாக ஆடி 33 பந்தில் 49 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர மற்ற அனைவருமே சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 19.4 ஓவரில் வெறும் 109 ரன்களுக்கு சுருண்டது வங்கதேச லெஜண்ட்ஸ் அணி.

110 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இந்தியா லெஜண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சச்சினும் சேவாக்கும் இறங்கினர். சேவாக் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய காலத்தில் எப்படி அடித்து ஆடினாரோ, அதேபோலவே ஆரம்பத்திலிருந்து அடி வெளுத்துவாங்கினார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து தெறிக்கவிட்ட சேவாக்கிற்கு மறுமுனையில் ஒத்துழைப்பு கொடுக்கும் வேலையை மட்டுமே செய்தார் சச்சின் டெண்டுல்கர்.

அதிரடியாக ஆடிய சேவாக் 35 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 80 ரன்களை குவித்து 11வது ஓவரின் முதல் பந்திலேயே இலக்கை எட்ட உதவினார். சச்சினும் சேவாக்கும் இணைந்தே போட்டியை முடித்துவிட்டனர். இந்தியா லெஜண்ட்ஸ் அணி ஒரு விக்கெட்டைக்கூட இழக்காமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.