சீனாவில் உருவான கொரோனா உலகம் முழுதும் படுவேகத்தில் பரவி சர்வதேசத்தையே அச்சுறுத்திவருகிறது. சீனா, இத்தாலி, ஸ்பெய்ன், ஈரான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது. 

கொரோனா உருவான சீனாவைவிட இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். அந்தளவிற்கு அங்கு கொரோனாவின் தாக்கம் வீரியமாகவுள்ளது. அமெரிக்கா, ஸ்பெய்ன், ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்குகிறது. 

உலகம் முழுதும் ஒட்டுமொத்தமாக சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 258 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. 

கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் வெளியே செல்லாமல், தங்களை தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகிக்கொண்டிருக்கும் நிலையில், ஸ்காட்லாந்து கிரிக்கெட் வீரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கேன் ரிச்சர்ட்ஸன், நியூசிலாந்து வீரர் ஃபெர்குசன் ஆகியோருக்கு ஏற்கனவே கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டது. ஆனால் அவர்களுக்கு டெஸ்ட்டின் முடிவில் கொரோனா இல்லையென்பது உறுதியானது. பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஆடியதால் பாகிஸ்தான் வீரர்கள் அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. 

இந்நிலையில், ஸ்காட்லாந்து வீரர் மஜீத் ஹக்கிற்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச அளவில் அனைத்து கிரிக்கெட் தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் மே மாதம் வரை எந்த போட்டிகளும் நடத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.