ரஞ்சி டிராபியில் நன்றாக ஆடியும் இந்தியா ஏ அணியிலோ துலீப் டிராபி அணியிலோ இடம் கிடைக்காத விரக்தியில் மிகக்கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார் சவுராஷ்டிரா வீரர் ஷெல்டன் ஜாக்சன். 

கடந்த ரஞ்சி சீசனில் 854 ரன்களை குவித்த ஷெல்டன் ஜாக்சனுக்கு இந்தியா ஏ அணியிலோ அல்லது துலீப் டிராபி அணியிலோ கூட இடம் கிடைக்கவில்லை. அவருக்கு மட்டுமல்லாது சவுராஷ்டிரா அணியில் ஆடிய மற்ற சில திறமையான வீரர்களுக்கும் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அணி தேர்வில் பாரபட்சம் இருப்பதாக கருதும் ஜாக்சன், தொடர் புறக்கணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் கடுமையாக கேள்விகளை எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஷெல்டன் ஜாக்சன், சவுராஷ்டிரா அணி ரஞ்சி தொடரின் இறுதி போட்டியில் ஆடியது. சவுராஷ்டிரா வீரர்கள் நன்றாக ஆடி திறமையை நிரூபித்தனர். ஆனாலும் எங்களில் யாரும் இந்தியா ஏ அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. ரஞ்சி டிராபியில் நன்றாக ஆடினாலும் இறுதி போட்டியில் ஆடினாலும் அதன் முக்கியத்துவம் பூஜ்ஜியம் தான்.

ரஞ்சி தொடருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையா அல்லது சிறிய அணிகளும் அதன் வீரர்களும் புறக்கணிக்கப்படுகின்றனரா என்று தெரியவில்லை. ஏனெனில் கடந்த 5 ரஞ்சி சீசன்களில் 3 முறை சவுராஷ்டிரா அணி இறுதி போட்டியில் ஆடியுள்ளது. எங்கள் அணியில் நல்ல பேட்ஸ்மேன்களும் உள்ளனர், நல்ல பவுலர்களும் உள்ளனர். ஆனாலும் எங்களில் யாருக்கும் வாய்ப்பளிக்கப்படுவதில்லை. தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறோம். 

இப்படியெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது என்று சில என்னிடம் சிலர் கூறுகின்றனர். ஆனால் இந்த அமைப்பிற்காக ஆடும் கிரிக்கெட் வீரர்களாக, எங்கள் மீது இருக்கும் குறைகள் என்ன? நாங்கள் எதில் சொதப்புகிறோம்? ஏன் புறக்கணிக்கப்படுகிறோம் என்று கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை இருக்கிறது. ஒருவேளை இப்படியே எங்களது கிரிக்கெட் கெரியர் முடிந்துவிடுமோ? என்று துணிச்சலுடன் கேள்வி எழுப்பியுள்ள ஷெல்டன் ஜாக்சன், தேர்வாளர்கள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.