இங்கிலாந்து பாகிஸ்தான் இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் பட்லரின் ஸ்மார்ட்டான விக்கெட் கீப்பிங்கால் சர்ஃபராஸ் அகமது 3 ரன்னில் சதத்தை தவறவிட்டு வெளியேறியதோடு, பாகிஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பையும் தாரைவார்த்தார். 

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான முதல் 4 போட்டிகளில் முதல் போட்டி முடிவில்லாமல் முடிந்த நிலையில், அடுத்த 3 போட்டிகளிலும் வென்று நான்கு போட்டிகளின் முடிவிலேயே தொடரை வென்றுவிட்டது இங்கிலாந்து. கடைசி போட்டி நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 351 ரன்களை எடுத்தது. 352 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, முதல் 3 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. சர்ஃபராஸ் அகமது மற்றும் பாபர் அசாம் ஆகிய இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். எனினும் பாபர் அசாம் 80 ரன்களில் ஆட்டமிழந்தார். சதத்தை நெருங்கிய சர்ஃபராஸ் அகமது மோசமான முறையில் ரன் அவுட்டாகி 3 ரன்னில் சதத்தை தவறவிட்டார். அதன்பின்னர் பாகிஸ்தான் அணியால் இலக்கை விரட்டமுடியவில்லை. 297 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 54 வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

சர்ஃபராஸ் அகமதுவின் விக்கெட் தான் இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தியது. 97 ரன்கள் அடித்து நன்றாக ஆடிக்கொண்டிருந்த சர்ஃபராஸ், அவசரப்பட்டு ஆட்டமிழந்தார். மொயின் அலி வீசிய 32வது ஓவரின் கடைசி பந்தை லேட் கட் ஷாட் அடித்த சர்ஃபராஸ், பந்து விக்கெட் கீப்பரை கடந்துவிடும் என்று கருதி ஓட முயன்றார். ஆனால் அந்த பந்தை சாமர்த்தியமாக காலால் தடுத்த பட்லர், பந்தை எடுத்து ரன் அவுட் செய்தார். சுதாரித்த சர்ஃபராஸ் மீண்டும் கிரீஸுக்குள் வந்தார். ஆனால் பேட் காற்றில் இருந்ததால் ரன் அவுட்டாகி வெளியேறினார் சர்ஃபராஸ். சதத்தை 3 ரன்களில் தவறவிட்டார். சர்ஃபராஸ் அகமது களத்தில் நின்றிருந்தால் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு வாய்ப்பிருந்தது.